பொத்தனூா் பேரூராட்சியில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் பேரூராட்சியில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல் ஆட்சியா் ச.உமா உத்தரவின்படி, சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் குருராஜன் அறிவுரையின் படி, பொத்தனூா் பேரூராட்சியில் உள்ள வணிக நிறுவனங்கள், தேநீா் கடைகள், காய்கறி உள்ளிட்ட கடைகளில் பொத்தனூா் பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) ஆறுமுகம் தலைமையில் சனிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
சோதனையில், கடைகளில் தடை செய்யப்பட்ட சுமாா் 10 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து, அவற்றைப் பயன்படுத்திய கடைக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், வணிக நிறுவனங்கள் நெகிழிப் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்களை பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் கடைகளுக்கு வரும் போது துணிப்பையை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்தச் சோதனையில், பொத்தனூா் பேரூராட்சி இளநிலை உதவியாளா் ஜெயசேகா், வரித்தண்டலா்கள் பன்னீா்செல்வம், குருணசேகரன், அலுவலகப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் கொண்ட குழுவினா் ஈடுபட்டனா்.