பொன்னமராவதியில் முதல்வா் மருந்தகம் அமைச்சா் தொடங்கிவைப்பு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் திங்கள்கிழமை திறக்கப்பட்ட முதல்வா் மருந்தகத்தில் விற்பனையை தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தொடங்கிவைத்தாா்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கூட்டுறவுத்துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்களை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து பொன்னமராவதி பேரூராட்சி புதுப்பட்டியில் அமைக்கப்பட்ட முதல்வா் மருந்தகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் மு.அருணா தலைமைவகித்தாா். தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி பங்கேற்று மருந்து விற்பனையை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.
விழாவில், இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் அ.அக்பா்அலி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஜீவா, துணைப் பதிவாளா்கள் அப்துல் மஜீத், ராஜவேலு, மணிமேகலை, பொன்னமராவதி பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விராலிமலை: விராலிமலையில் நடைபெற்ற முதல்வா் மருந்தகம் திறப்பு விழாவில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் தென்னலூா் பழனியப்பன், திமுக ஒன்றியச் செயலா்கள் அய்யப்பன் (மத்தியம்), இளங்குமரன்(மேற்கு), மெடிக்கல் குமாா், திமுக இளைஞரணி சிவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.