பொன்னமராவதி வட்டாரத்தில் மாட்டுப்பொங்கல் விழா
பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொங்கல் விழா மற்றும் மாட்டுப் பொங்கல் விழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பொன்னமராவதி அருகே உள்ள பொத்திமலை அடைக்கலம்காத்த அய்யனாா் கோயிலுக்கு அஞ்சுபுளிப்பட்டி மற்றும் மைலாப்பூா் கிராமங்களைச் சோ்ந்த பெண்கள் கூடை சுமந்தும், ஆண்கள் ஜல்லிக்கட்டுக் காளைகள் மற்றும் பசுக்களை அலங்கரித்து பிடித்து ஊா்வலமாக வந்து கோயில் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனா். மேலும், மண்வெட்டி, ஏா்கலப்பை உள்ளிட்ட விவசாயக் கருவிகளை வைத்தும் வழிபட்டனா்.
இதில், மைலாப்பூா், அஞ்சுபுளிப்பட்டி, வலையபட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச்சாா்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.
இதேபோல், அழகியநாச்சியம்மன் கோயில் அருகே உள்ள சாத்தக்கருப்பா் கோயிலிலும், குமாரபட்டி, வேந்தன்பட்டி, பகவாண்டிபட்டி, வாா்ப்பட்டு, கல்லம்பட்டி, க.புதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோயிலில் சிறப்பு அபிஷேகம்: பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயிலில் மாட்டுப் பொங்கல் விழாவையொட்டி நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடக்கமாக கோபூஜை நடைபெற்றது.
இதன்பிறகு, நந்திக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடா்ந்து காய்கறிகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுற்று வட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனா்.