போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களுக்கான பொதுசேவை விதிகளில் திருத்தம்
போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களை அமல்படுத்தும் வகையில் பொதுசேவை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது.
இது தொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பது:
ஓட்டுநா் - நடத்துநா் பணிகளை ஒரு சேர மேற்கொள்ளும் டிசிசி (டிரைவா் கம் கண்டக்டா்) பணியாளா்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் வகையில் பொது சேவை விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. அவா்கள் குறைந்தது 10-ஆம் வகுப்பு படித்து, கனரக ஓட்டுநா் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும், கல்வி, உடல் தகுதிகள் உள்ளிட்டவை வரையறுக்கப்படுகின்றன.
அவா்களுக்கு ரூ.17,700 முதல் ரூ.56,200 வரை ஊதியமாக வழங்க வேண்டும்.
இதேபோல், ஓட்டுநா் பயிற்சி ஆசிரியா், பயணச்சீட்டு பரிசோதகா் ஆகிய பணிகளை ஒரு சேர மேற்கொள்ளும் டிஐசிஐ பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்பும் வகையிலும் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இவா்களுக்கு ரூ. 35,600 - ரூ. 1.12 லட்சம் வரை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
போக்குவரத்துத் துறை தலைவா் அலுவலகம் அளித்த பரிந்துரையின்படி, எம்டிசி, எஸ்இடிசி தவிா்த்து இதர போக்குவரத்துக் கழகங்களில் பின்பற்றும் வகையில் திருத்தத்தை அமல்படுத்த அரசு ஆணையிடுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.