போதைப் பழக்கத்திற்கு அடிமையான பெண்! முகத்தில் உருவான ஓட்டை!
அமெரிக்காவில் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையான பெண்ணின் முகத்தில் ஓட்டை உருவாகி அவருக்கு தற்போது 15க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இலினொயிஸ் மாகாணத்தின் சிகாகோ நகரத்தைச் சேர்ந்த கெல்லி கோசிரா (வயது 38) என்ற பெண் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது நண்பர்களுடன் கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு அவரது நண்பர்களில் ஒருவர் வழங்கிய கோக்கைன் எனும் போதைப் பொருளை மூக்கின் வழியாக உரிந்து போதையடைந்துள்ளார்.
அன்று முதல் அவர் அந்த போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி அதற்காக சுமார் ரூ.70 லட்சம் அளவிலான பணத்தை செலவு செய்து தொடர்ந்து அவர் அந்த போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அவர் அந்த பழக்கத்திற்கு அடிமையான சில மாதங்களில் அவரது மூக்கிலிருந்து தசைகள் கிழிந்து ரத்தத்துடன் சேர்ந்து வெளியாகியுள்ளது. அந்த காயங்கள் அனைத்தும் அதுவாக குணமாகிவிடும் என அவர் நினைத்து அதனைக் கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார். ஆனால், சில நாள்களில் அவரது மூக்கு பகுதி முழுவதுமாக பாதிப்படைந்து, அங்கு ஓர் ஓட்டை உருவாகியுள்ளது.
இதையும் படிக்க: தென் ஆப்பிரிக்கா: புதியதாக மூன்று குரங்கு அம்மை பாதிப்பு கண்டுபிடிப்பு!
இதைக் கண்ட அவரது குடும்பத்தினரின் தலையீட்டால், அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் போதைப் பழக்கத்தை கைவிட்டு அதிலிருந்து மீண்டுள்ளார். அதன் பின்னர் அவரது முகத்தில் விழுந்த ஓட்டையை சரிசெய்ய சுமார் 15 அறுவைச் சிகிச்சைகள் அவருக்கு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதில், அவரது நெற்றியிலிருந்து எடுக்கப்பட்ட தோலை வைத்து அவரது மூக்கை மறு வடிவமைப்பு செய்யும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது .
தற்போது, அவரது அறுவைச் சிகிச்சையின் காயங்கள் குணமாகி வரும் நிலையில் தனது அனுபவத்தின் வாயிலாக போதைப் பொருள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்.