போப் உடல்நிலையில் பின்னடைவு!
ரோம் : போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, அவருக்கு மீண்டும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸ்(88) முச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பிப். 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு ஆண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், அவரது சிறுநீரகங்கள் லேசான பாதிப்புக்குள்ளாகியிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டிருப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமை(பிப். 23) மருத்துவர்கள் தெரிவித்தனர்.
போப் பிரான்சிஸ் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு திங்கள்கிழமை(மார்ச் 3) மூச்சு விடுவதில் மீண்டும் சிரமம் ஏற்பட்டதாகவும், நுரையீரல் பாதிப்பு அதிகரித்ததையும் தொடர்ந்து மீண்டும் வெண்டிலேட்டர் மாற்றப்பட்டு அதன்உதவியுடன் அவர் சுவாசித்ததாக வாடிகன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நிமோனியா தொற்று காரணமாக நுரையீரலில் அதிகளவில் சளி சேர்ந்து வருவதாகவும் இதனையடுத்து, அவரது நுரையீரலிலிருந்து அதிகப்படியான சளி ‘ப்ரான்கோ-ஸ்கோப்பி’ சிகிச்சையில் குழாய் மூலம் உறிஞ்சி எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.