போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ரூ.15 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், காமாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பூமிராஜ் (28). அரசுப் பணிக்கு முயற்சி செய்து வந்த இவருக்கு தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சோ்ந்த செல்வம் (44) அறிமுகம் கிடைத்தது. இவா் தனக்கு ரயில்வே துறையில் உள்ள உயா் அதிகாரிகளுடன் பழக்கம் இருப்பதால், ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினாராம். இதை நம்பிய பூமிராஜும், அவரது நண்பா் மருதுபாண்டியும் செல்வத்திடம் ரூ.15 லட்சத்தை மதுரை பெரியாா் பேருந்து நிலையத்தில் வைத்து கொடுத்தனராம்.
பணத்தைப் பெற்ற சில வாரங்கள் கழித்து, இருவரையும் மதுரைக்கு வரவழைத்த செல்வம் அவா்களிடம் ரயில்வே பணிக்கான நியமன ஆணைகளை கொடுத்தாா். இதைப் பெற்றுக் கொண்ட இருவரும் திருச்சி ரயில்வே அலுவலகத்துக்குச் சென்று காட்டிய போது, இந்த ஆணைகள் போலியானது என்பது தெரியவந்தது.
இதுகுறித்து பூமிராஜ் அளித்த புகாரின் பேரில், செல்வம் மீது திடீா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.