மேட்டுப்பாளையம்: 15 வயது பள்ளி சிறுவனை கடித்த தெரு நாய் - ரேபிஸ் நோயால் உயிரிழந்...
மகாராஷ்டிரா: போலி ஆபாச வீடியோவைக் காட்டி MLA-விடம் ரூ.10 லட்சம் பறிப்பு; விவசாயி கைதான பின்னணி என்ன?
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வை ஆபாச வீடியோவைக் காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சிவாஜி பாட்டீல். சுயேச்சை எம்.எல்.ஏ.வான சிவாஜி பாட்டீலுக்கு மும்பை தானே பகுதியிலும் ஒரு வீடு இருக்கிறது. சிவாஜி பாட்டீலலைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வாட்ஸ் ஆப் மூலம் பெண் ஒருவர் தொடர்பு கொண்டார். அந்தப் பெண் அடிக்கடி எம்.எல்.ஏவிற்கு வாட்ஸ் ஆப் கால் செய்தார்.
அதனை ஆரம்பத்தில் புறக்கணித்த எம்.எல்.ஏ. பின்னர் எடுத்துப் பேசியபோது போனில் பேசிய பெண், தங்களுடன் நட்பு வைத்துக்கொள்ள விரும்புவதாகவும், தங்களை எனக்கு முன்கூட்டியே தெரியும் என்றும் தெரிவித்தார். ஆனால் அடுத்த சில நாட்களில் அந்தப் பெண் எம்.எல்.ஏ-விடம் ரூ.10 லட்சம் கொடுக்கும்படி கேட்டார்.

இதனால் எம்.எல்.ஏ அப்பெண்ணின் மொபைல் நம்பரை பிளாக் செய்துவிட்டார். அப்படி இருந்தும் அந்தப் பெண் வேறு ஒரு நம்பரில் இருந்து போன் செய்து, ஆபாசமாகப் பேச ஆரம்பித்தார். அதோடு அடிக்கடி ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பினார்.
மேலும் ரூ.10 லட்சம் கொடுக்கவில்லையெனில் அந்த ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். இதனால் எம்.எல்.ஏ. அடிக்கடி பணம் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்படி இருந்தும் அப்பெண் தொடர்ந்து பணம் கேட்டுக்கொண்டே இருந்தார். இதனால் எம்.எல்.ஏ. இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் கோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது.
மோகன் பவார் என்ற அந்த நபர் விவசாயம் செய்து வருகிறார். கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ள மோகன் ஆன்லைனில் பெண்களின் புகைப்படங்களைப் பதிவிறக்கம் செய்து அதனைப் போலி வீடியோவாக மாற்றி அனுப்பி இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. மோகனைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மோகன் தன்னை பெண் போல் மாற்றிக்கொண்டு எம்.எல்.ஏ.வைத் தொடர்பு கொண்டு பேசியதாக போலீஸ் துணை கமிஷனர் பிரசாந்த் கதம் தெரிவித்துள்ளார்.
இம்மோசடியில் மோகனின் சகோதரிக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்தான் எம்.எல்.ஏ.விடம் மோகன் சார்பாகப் பேசியதும் தெரிய வந்துள்ளது.