மகாராஷ்டிரா: "21 டிகிரியில் விளையும் ஆப்பிள் இனி 43 டிகிரியிலும் விளையும்" - இளம் பொறியாளர் அசத்தல்
மகாராஷ்டிராவில் ஐ.டி பிரிவில் பொறியியல் பட்டம் படித்த பிறகு சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் சென்று நவீன முறையில் விவசாயம் செய்து வருகிறார் விக்ராந்த் காலே. தனது ஐ.டி படிப்பை விவசாயத்தில் பயன்படுத்த விக்ராந்த் காலே முடிவு செய்து அதற்கான வேலையில் இறங்கினார். அவரது பெற்றோர் வழக்கமாகப் பயிரிடக்கூடிய மாதுளையைப் பயிரிட்டு இருந்தனர். ஆனால் விக்ராந்த் காலே அதிலிருந்து சற்று மாறுபட்டு வேறு பழங்களைப் பயிரிட முடிவு செய்தார்.
![விக்ராந்த் காலே தோட்டம்](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/ztccjz0t/XMWM5iIFdvggJTbcLA5r.webp)
இது குறித்து விக்ராந்த் காலே கூறுகையில், ''குளிர்பிரதேசத்தில் மட்டுமே விளையக் கூடிய ஆப்பிளை எங்களது தோட்டத்தில் பயிரிட முடிவு செய்தேன். இதற்காக வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய ஆப்பிள் கன்றுகளை இமாச்சல் பிரதேசத்திலிருந்து வாங்கி வந்தேன். தலா 150 ரூபாய் வீதம் 800 கன்றுகளை வாங்கி வந்தேன். 43 டிகிரி வெப்பம் இருக்கும் எங்களது தோட்டத்தில் வரிசைக்கு வரிசை 13 அடியும், செடிக்குச் செடி 9 அடியும் இடைவெளி விட்டு நடவு செய்தேன். நிலத்தில் அதிக அளவில் மாட்டுச்சாணம் மற்றும் வேப்பங்கொட்டை புண்ணாக்குப் போட்டு வளப்படுத்தினேன்.
2019 ஆம் ஆண்டு அதனை நடவு செய்தேன். மூன்று ஆண்டுகள் கழித்துப் பூப்பூத்துக் காய் காய்க்க ஆரம்பித்தது. முதல் ஆண்டு ஒரு செடியில் 7 முதல் 8 கிலோ ஆப்பிள் கிடைத்தது. அதன் பிறகு படிப்படியாக அதிகரித்து ஐந்தாவது ஆண்டில் ஒரு செடியில் 20 முதல் 25 கிலோ வரை ஆப்பிள் கிடைக்கிறது. மொத்த வியாபாரிகள் எனது தோட்டத்திற்கே வந்து கிலோ ரூ.100 முதல் 120 வரை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். நான் பழங்களை மார்க்கெட்டிற்கு எடுத்துச் செல்வது கிடையாது.
அதிகமானோர் என்னிடம் ஆப்பிள் கன்றுகள் கேட்டனர். எனவே நானே சொந்தமாகச் சங்கேத் நர்சரி என்ற பெயரில் ஆப்பிள் கன்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறேன். அதோடு தாய்வான் வெள்ளை ஜாமுன் எனப்படும் நாவல் பழத்தையும் பயிரிட்டுள்ளேன். 2019ம் ஆண்டு கேரளாவில் எனது நண்பரின் பண்ணையில் அதனைப் பார்த்து ஒரு செடி 300 ரூபாய்க்கு வாங்கி வந்தேன். இப்போது ஒரு செடி விலை குறைந்து 150 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஒரு ஏக்கரில் வரிசைக்கு வரிசை 15 அடியும், செடிக்குச் செடி 12 அடியும் இடைவெளியில் நடவு செய்தேன். மற்ற நாவல் பழ மரங்கள் 4 ஆண்டுகள் கழித்துத்தான் மகசூல் கொடுக்கும்.
![விக்ராந்த் காலே தோட்டம்](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/4z5200u2/Ee4KSvsIV5CrlQtAM6zG.webp)
ஆனால் தாய்வான் வெள்ளை ரக நாவல்பழம் 3 ஆண்டில் பழம் கொடுக்க ஆரம்பித்தது. 3வது ஆண்டில் ஒரு செடியில் 5 முதல் 7 கிலோ கிடைத்தது. ஐந்தாவது ஆண்டில் 20 முதல் 25 கிலோ கிடைக்கும். கடந்த ஆண்டில் எனக்கு 14 கிலோ கிடைத்தது. ஒரு கிலோ ரூ.180 முதல் 240 வரை விற்பனையாகிறது. ஒரு ஏக்கரில் 5.5 லட்சம் வருமானம் கிடைக்கிறது. இதில் செலவு போக 4.5 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது. இது தவிர நாவல் பழ செடிகளையும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறேன். அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒரே ஆண்டில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான நாவல்பழ மர செடிகளைத் தலா 150 ரூபாய் வீதத்திற்கு விற்பனை செய்ததன் மூலம் நல்ல லாபம் கிடைத்தது.
ஒரே ஆண்டில் கன்றுகள் விற்பனை செய்ததன் மூலம் 22 லட்சம் கிடைத்தது. வெள்ளை நாவல் பழங்கள் கருப்பு நாவல் பழத்தை விட இரண்டு மாதத்திற்கு முன்பே அறுவடைக்கு வந்துவிடும். அவற்றை 200, 500 கிராம் மற்றும் ஒரு கிலோ என்ற அளவுகளில் பேக்கிங் செய்து சீரடி மற்றும் மும்பை மார்க்கெட்டிற்கு அனுப்பிவிடுவேன். கருப்பு நாவல் பழம் போன்று இல்லாமல் வெள்ளை நாவல் பழம் ஆப்பிள் போன்று இனிப்பாக இருக்கும். அதோடு வெள்ளை நாவல் பழ செடிகளில் பூக்கள் உதிராது. ஆனால் கருப்பு நாவல் பழ செடியில் பூக்கள் அதிக அளவில் உதிர்ந்து விடுகிறது. அறுவடைக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் ஜூலையில் செடிகளை மேல் மட்டத்தில் வெட்டி விட வேண்டும்'' என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs