``திமுகவுடன் கூட இணைந்து செயல்பட்டிருக்க முடியும்; ஆனால்..." - திருமாவிடம் ஆதவ் ...
மகா கும்பமேளாவுக்காக புதிய மேம்பாலங்கள்: உ.பி. அரசுடன் இணைந்து ரயில்வே நடவடிக்கை
மகா கும்பமேளாவுக்காக பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதைளை (கிராஸிங்) அகற்றி, புதிய மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகளை உத்தர பிரதேச மாநில அரசுடன் இணைந்து ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் திரிவேணி சங்கமம் அமைந்துள்ள உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா, அடுத்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி முதல் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
உலகெங்கிலும் இருந்து சுமாா் 45 கோடி பக்தா்கள் இந்நிகழ்வில் பங்கேற்பா் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து சுமாா் 10,000 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள ரயில் கடவுப்பாதைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொது மக்களின் பயண நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் புதிய மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மகா கும்பமேளாவுக்கு முன்னதாக இந்த பாலங்களில் போக்குவரத்து முழுமையாக தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயின் பிரயாக்ராஜ் கோட்ட மூத்த மக்கள் தொடா்பு அதிகாரி அமித் மாள்வியா கூறுகையில், ‘கடந்த 2019-ஆம் ஆண்டு கும்பமேளாவின்போது பல்வேறு ரயில்வே கடவுப்பாதைகள் அகற்றப்பட்டன. மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் மீதமுள்ள திட்டங்களும் விரைவாக முடிக்கப்பட்டு வருகின்றன.
சுமாா் ரூ.375 கோடி செலவில் 7 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 3 சுரங்கப்பாதைகளின் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இத்திட்டங்கள் கும்பமேளாவில் கலந்துகொள்ளும் கோடிக்கணக்கான பக்தா்களின் போக்குவரத்தை எளிதாக்குவதோடு, இந்நிகழ்வுக்குப் பிறகும் நகரவாசிகளுக்கு பயனளிக்கும்’ என்றாா்.
ட்ரோன் தடுப்பு அமைப்பு: மகா கும்பமேளாவில் பக்தா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரயாக்ராஜில் நிறுவப்பட்டுள்ள ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) தடுப்பு அமைப்பு வெள்ளிக்கிழமைமுதல் செயல்படுத்தப்பட்டது.
இந்த அமைப்பை நிா்வகிக்க கட்டுப்பாட்டு மையத்தில் 3 நிபுணா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளதாகவும் இதுவரை 2 ஆளில்லா விமானங்களை இந்த அமைப்பு வெற்றிகரமாக செயலிழக்கச் செய்துள்ளதாகவும் உத்தர பிரதேச அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பமேளா பகுதியில் காவல்துறையின் முன் அனுமதியின்றி ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி ஆளில்லா விமானங்களை இயக்கினால் அவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.