கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
மகா சிவராத்திரி அன்று செய்யவேண்டியவை; உங்கள் ராசிக்கான வழிபாடு என்ன?
ஓர் ஆண்டில் மிகவும் உன்னதமான நாளாகக் கருதப்படுவது மகா சிவராத்திரி. அந்த நாளில் சிவ வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் சிவ வழிபாடு செய்த பலன் கிடைக்கும். சிவ வழிபாடு செய்யும் அன்பர்களுக்கு நவகிரகங்களும் நன்மையே செய்யும் என்பது ஆன்றோர் வாக்கு. எனவே நவகிரக ப்ரீதி வழிபாடுகள் செய்வதை விட சிவ வழிபாடு செய்வதே உயர்ந்தது என்பார்கள் பெரியோர்கள்.
தற்போதைய கிரக நிலவரங்கள் அபூர்வமானவை. பெரும்பாலான கிரகங்கள் நேர் கோட்டில் அமைந்துள்ளன. கும்பத்தில் சூரியனும் ரிஷபத்தில் குரு பகவானும் அமர்ந்திருக்கும் காலத்திலேயே கும்பமேளா கொண்டாடப்படும். அப்படி இந்த ஆண்டு கொண்டாடப்படும் கும்பமேளா மகா கும்பமேளா என்று போற்றப்படுகிறது.
மகாசிவராத்திரியே அதன் நிறைவாக விளங்குகிறது. எனவே வழக்கமான மகாசிவராத்திரியை விட இந்த ஆண்டு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் 12 ராசிக்காரர்களும் செய்ய உகந்த வழிபாடுகள் என்ன... எப்படிப்பட்ட வழிபாடுகளைச் செய்தால் மிகுந்த நன்மையைப் பெறலாம் என்பது குறித்துக் காண்போம்.

மேஷம் : மேஷ ராசிக்காரர்களுக்கு 12 - ல் ராகு புதன் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள், 6 - ல் ராகு என கிரக நிலைகள் கொஞ்சம் சாதகமற்றுத் திகழ்கின்றன. பகைவர்கள் வகையில் தொல்லை, கடன் சிக்கல்கள், சின்னச் சின்ன உடல் உபாதைகள் என்று ஏதேனும் ஒன்று படுத்திக்கொண்டே இருக்கும். இந்த நிலை மாற சிவ வழிபாடு ஆகச்சிறந்த பரிகாரமாகத் திகழும். அருகில் இருக்கும் சிவாலயத்துக்கு பச்சரிசி, துவரம் பருப்பு, நல்லெண்ணெய் ஆகியவற்றை தானமாகக் கொடுக்க மிகுந்த நற்பலன்கள் உண்டாகும்.
ரிஷபம் : ராசியிலேயே குருபகவான் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் செயல்களில் பல தடைகள் இருந்த வண்ணம் இருக்கும். சனி பகவான் 10 ல் சஞ்சாரம் செய்வதால் பணி இடத்தில் திருப்தி இல்லாத நிலை இருந்துவந்திருக்கும். அடுத்த மாதம் சனி பகவான் 11 - ம் இடத்துக்குப் பெயர்கிறார். குருபகவான் 2 - ம் இடத்துக்குச் செல்கிறார். இந்த மாற்றங்கள் அற்புதமான பலன்களைத் தர இருக்கின்றன. அவற்றை முழுமையாகப் பெற சிவ வழிபாடு தேவை. சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த இந்த ராசிக்காரர்கள் சிவ பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர் ஆகிய அபிஷேகப் பொருள்களை வாங்கி சமர்ப்பணம் செய்ய நற்பலன்கள் மிகுதியாகும். சுகபோக வாழ்வு கிட்டும்.
மிதுனம் : 12 - ல் குரு, 10-ல் ராகு என்னும் கிரக அமைப்பு பல இன்னல்களையும் மனத்தாங்கல்களையும் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும். அடுத்த சில மாதங்களில் குருபகவான் ராசிக்குள்ளேயே வர இருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் குரு வழிபாடு மிகவும் சிறந்தது. பிரபஞ்ச குருவாக ஆலமர் செல்வனாக அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியை வழிபட வழிபட சகல பிரச்னைகளும் தீரும். மகா சிவராத்திரியில் இரண்டாம் காலத்தில் சுவாமியை தட்சிணாமூர்த்தியாக வழிபடுவது வழக்கம். எனவே அந்தக் காலத்தில் சிவார்ச்சனைக்கு வில்வம் சமர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணிய பலனைத் தரும். சக்தி இருப்பவர்கள் சிவனடியார்களுக்கு வஸ்திர தானம் செய்வதும் மிகச்சிறந்த பரிகாரமாக விளங்கும்.
கடகம் : தற்போது இருக்கும் அஷ்டம சனி நிலை அடுத்த மாதம் மாறிவிடும். இந்நிலையில் ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்துக்குப் பெயர்ச்சி ஆக உள்ளார். செயல்களில் தடைகள் விலகினாலும் தாமதங்கள் இருக்கும். எனவே கடக ராசி அன்பர்கள் திரவப் பொருள்களான, பால், இளநீர், சந்தனம், பன்னீர், தேன் ஆகியவற்றை சிவாலயங்களுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும். குறிப்பாக கருப்பஞ்சாறு சமர்ப்பணம் செய்து வழிபட்டால் வாழ்வில் தொல்லைகள் அகலௌம். இன்ப நிலை கை கூடும். சிவனருள் வழிநடத்தும்.

சிம்மம் : சிம்மராசிக்கு அடுத்த மாதம் அஷ்டம சனி தொடங்க இருக்கிறது. எனவே அடுத்த மூன்றாண்டுகளுக்குத் தொடர்ந்து சனிக்கிழமைகளில் சிவாலய தரிசனம் செய்ய வேண்டியது சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் அவசியம். இந்த மகா சிவராத்திரியில் அபிஷேகத்துக்குத் தேவையான விபூதியை தானமாகக் கொடுப்பது நல்லது. நாகலிங்கப் பூ, செண்பகம் ஆகிய மலர்களை சிவார்ச்சனைக்கு ஆங்கிக்கொடுக்கலாம். வில்வ மாலை சாத்தி தரிசனம் செய்ய சகல விதமான பிரச்னைகளும் நம்மை அணுகாமல் போகும்.
கன்னி : ராசியில் கேது, 7 - ல் ராகு அமர்ந்திருக்கிறார். அடுத்த சில மாதங்களில் சனி பகவான் 7 - ல் சென்று அமர இருக்கிறார் இந்த நிலை மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒன்று என்கிறார்கள் வல்லுநர்கள். எனவே கன்னி ராசிக்காரர்கள் சிவ வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். சுவாமிக்கு வில்வம் சமர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த மகாசிவராத்திரியில் தயிர்சாதம் நிவேதனம் செய்து விநியோகம் செய்வது விசேஷம். தேன் சமர்ப்பணம் செய்வதன் மூலம் சகல பாவங்களும் விலகி நன்மைகள் கைகூடும்.
துலாம் : தற்போது மிகுந்த இடர்பாடுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் ராசிக்காரர்கள் துலா ராசிக்காரர்கள். குரு பகவான் 8 - ல் மறைந்திருக்கிறார். 12 - கேது அமர்ந்து கட்டுக்கடங்காத செலவுகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த கிரக நிலை விரைவில் மாறப்போகிறது. அடுத்த மூன்று மாதங்களின் முடிவில் மிகுந்த அற்புதமான நிலை உண்டாகப் போகிறது. அவை சிறப்பானதாக அமையவும் சுப நிகழ்வுகள் வரிசைகட்டவும் இந்த மகாசிவராத்திரியில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து கண் குளிரப் பாருங்கள். வசதி இருப்பவர்கள் ருத்ராட்சம் வாங்கி சிவனடியார்களுக்கு தானம் கொடுக்க வினைகள் நீங்கி புண்ணிய பலம் அதிகரிக்கும்.
விருச்சிகம் : செவ்வாயின் ராசியான விருச்சிகத்தில் சந்திரபகவான் நீசமாவார். எனவே அந்த ராசிக்காரர்களுக்கு எப்போதும் மனக்குழப்பம் இருந்த வண்ணம் இருக்கும். முடிவெடுக்க முடியாமல் தவிப்பார்கள். வரும் ஓரிரு மாதங்களில் ஏற்படப் போகும் கிரக நிலை உங்களுக்கு சாதகமாக மாறப்போகிறது. அதன் முழுபலனையும் அனுபவிக்க சிவ வழிபாடு செய்யுங்கள். சிவனடியார்களுக்கு வஸ்திர தானம் செய்து கடலோரம் இருக்கும் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யுங்கள். இயன்றவர்கள் ஸ்படிக லிங்கம் ஒன்றை சிவனடியார்க்கு தானமாகக் கொடுங்கள். இது மிகச்சிறந்த பரிகாரமாக விளங்கும். சுபகாரியத் தடைகள் நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும்.
தனுசு : குருபகவானின் வீட்டைச் சேர்ந்த தனுசு ராசிக்காரர்களுக்குத் தற்போது 3 - ல் அமர்ந்திருக்கும் சனிபகவான் அடுத்த மாதம் 4 - ம் வீட்டுக்குச் செல்கிறார். அர்த்திராஷ்டம சனி பாடாய்ப் படுத்துமோ என்கிற கவலை பலருக்குள்ளும் இருக்கிறது. நல்ல வேளையாக ராசிக்கு மே மாதம் முதல் குரு பார்வை கிடைக்க இருக்கிறது. எனவே கெடுபலன்கள் குறையும். சுபபலன்கள் அதிகரிக்க சிவ வழிபாடு ஒன்றே வழி. சிவபெருமான் மௌன குருவாக தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கும் சந்நிதிகளில் விளக்கேற்றி வழிபடுங்கள். இந்த மகாசிவராத்திரி நாளில் அபிஷேக திரவியங்கள் வாங்கி சமர்ப்பணம் செய்யுங்கள். அதைக் கண் குளிர தரிசனம் செய்யுங்கள். நன்மைகள் கைகூடி வாழ்க்கை சிறப்பாகும்.
மகரம் : மகர ராசிக்காரர்களுக்கு அடுத்த மாத இறுதியில் ஏழரைச் சனி விலகப் போகிறது. என்றாலும் ராகு பகவான் இரண்டாம் வீட்டுக்கு வர இருக்கிறார். இந்த கிரக நிலவரங்கள் நன்மைகள் அதிகமாகவும் மத்திமமான பலன்கள் குறைவாகவும் இருக்கும். அவசரத்தால் குடும்பத்தில் பேச்சில் பிரச்னைகள் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகள் நீங்க மகாசிவராத்திரி நாளில் சிவ பெருமானை மனதார வழிபடுங்கள். சிவாலயங்களில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். நல்லெண்ணெய் தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்திருக்கும்.
கும்பம் : கும்ப ராசிக்காரர்களின் ராசியிலேயே சனி பகவான் இருக்கிறார். அடுத்த மாதம் அவர் நகர்ந்து இரண்டாம் இடம் செல்ல இருக்கிறார். இதுவரை இருந்துவந்த சுமை நீங்கும். மன பாரம் குறையும். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செல்வம் சேரும். என்ராலும் ராசியிலேயே ராகு வர இருக்கிறார். இதனால் ஏற்படும் சிரமங்கள் விலக நாகநாதர் என்கிர திருநாமம் உடைய சிவாலயம் சென்று தரிசனம் செய்து வாருங்கள். சிவராத்திரி நாளில் சுவாமிக்கு வில்வம், முல்லை மலர்கள் சாத்தி வழிபடுங்கள். சிவாலயங்களுக்கு விபூதி வாங்குக்கொடுத்து அதை அபிஷேகம் செய்வதைக் கண்டு வணங்குகள். வாழ்வில் பிரச்னைகள் விலகி நன்மைகள் கைகூடும்.
மீனம்: ராசியில் தற்போது ராகு இருக்கிறார். சனி பகவானும் அடுத்த மாத இறுதியில் ராசிக்குள் வருகிறார். இந்த நிலையில் குருவருளும் திருவருளும் மிகவும் அவசியம். சிவாலயங்களில் நடைபெறும் ஒரு கால பூஜைக்கு உதவுங்கள். விளக்கேற்றவே வழியில்லாத சிவாலயங்களுக்குச் சென்று விளக்கேற்று சுவாமிக்கு நிவேதனம் செய்து வஸ்திரம் சாத்தி வழிபடுங்கள். இந்தப் பரிகாரம் உங்கள் வாழ்க்கையி வளமாக்கும். சனியின் தொந்தரவுகளில் இருந்து காக்கும்.