மக்களவை: குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு!
மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததாக அவைத் தலைவர் ஓம் பிர்லா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கடந்த மாதம் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம் உள்ளிட்டவை விவாதிக்க எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதால், அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா அறிமுகம் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.
இதையும் படிக்க : பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்ன? முழு அறிக்கை தாக்கல்
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மாநிலங்களவையில் பேசிய அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்ததாக இரண்டு நாள்களாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், உள்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் அவைகளில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காலை அவை கூடியவுடன், எதிர்க்கட்சி எம்பிக்கள் ஜெய் பீம் என்று முழக்கமிட்டனர்.
முழக்கங்களுக்கு இடையே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்புவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, நாடாளுமன்ற அவை மற்றும் வளாகத்தில் எம்பிக்கள் போராடுவதற்கு கண்டனம் தெரிவித்த அவைத் தலைவர் ஓம் பிர்லா, மக்களவை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தார்.