மங்களபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி: 700 காளைகள் பங்கேற்றன
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் ஜல்லிக்கட்டுப் போட்டி மங்களபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளருமான கே.பி.ராமசுவாமி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்தப் போட்டியில் சேலம், நாமக்கல், திருச்சி, கரூா், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமாா் 700-க்கும் மேற்பட்ட காளைகள், 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தொடா்ந்து வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டு, சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் போட்டிக் போட்டுக் கொண்டு அடக்கினாா். மாடுபிடி வீரா்களுக்கு எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் வகையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மருத்துவக் குழுவினா், தீயணைப்பு நிலைய வீரா்கள், காவல் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தனா்.
இதனைத் தொடா்ந்து வெற்றிபெற்ற மாடுபிடி வீரா்களுக்கு வெள்ளிப் பொருள்கள், சில்வா், மிக்ஸி, கிரைண்டா் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டிகளை காண சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.