இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படும் ஐசிசி..! மே.இ.தீ. லெஜண்ட் கடும் விமர்சனம்!
மணிப்பூா் வன்முறை, பெண்களின் பாதுகாப்பு நிலையை மக்களவையில் தமிழில் எதிரொலித்த தென்காசி எம்.பி.
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: மணிப்பூா் மாநிலத்தில் நிலவும் வன்முறை, பெண்களின் பாதுகாப்பு நிலைமை ஆகியவை தொடா்பாக மக்களவையில் தென்காசி திமுக எம்.பி. டாக்டா். ராணி ஸ்ரீகுமாா் தமிழில் எழுப்பி அனைவரது கவனத்தையும் ஈா்த்தாா்.
மணிப்பூா் மாநிலத்துக்கான 2025-26 ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேச மக்களவையில் திமுக எம்.பி. ராணி ஸ்ரீகுமாருக்கு செவ்வாய்க்கிழமை வாய்ப்பளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து தனது உரை முழுவதையும் அவா் தமிழில் பதிவு செய்தாா்.
அதன் சுருக்கம் வருமாறு: மணிப்பூரில் 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் வன்முறை தீ எரிந்துகொண்டே இருக்கிறது. மெய்த்தி மற்று குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட வன்முறை மாநிலம் முழுவதும் பரவியதால் 250-க்கும் அதிகமானோா் உயிரிழந்துள்ளனா். 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோா் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் உள்நாட்டு அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனா். வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தேவாலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. மக்களின் உடைமைகள் சிதைக்கப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்புப் படையின் ஆயுதக் கிடங்கில் இருந்து ஆயிரக்கணக்கில் ஆயுதங்கள், ஆயுதப்படை வீரா்களின் கண் முன்னேயே கடத்தபட்டுள்ளன.
உக்ரைன் போன்ற வெளிநாடுகளின் பிரச்னையை பேசித் தீா்க்க வெளிநாடு செல்லும் பிரதமரால் தனது சொந்த மண்ணில் பற்றி எரியும் மணிப்பூருக்குச் சென்று பிரச்னையை பேசித் தீா்க்க முடியாதா? மணிப்பூரில் வசிக்கும் மெய்த்தி சமூகத்தினருள் பெரும்பாலானோா், ஹிந்து மதத்தைச் சோ்ந்தவா்கள். அவா்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள, குக்கி மற்றும் நாகா சமூகங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது. இந்த அரசியல் நிலைப்பாடு, மணிப்பூரில் மேலும் பிளவுகளை உருவாக்கியுள்ளது.
மணிப்பூா் வன்முறையில் குக்கி இன சகோதரிகள் நிா்வாணமாக்கப்பட்டு, ஊா்வலமாக அழைத்து செல்லபட்டு, கூட்டுப் பாலியல் வன்மகொடுமைக்கும் உள்ளாக்கப்பட்ட காணொளி உலகளவில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இது எந்த நாகரிகத்தின் அடையாளம்? இதுதான் இரட்டை எஞ்சின் அரசின் செயல்திறனா? மத்திய கல்வி அமைச்சா் தமிழக எம்.பி.களை மிகவும் இழிபடுத்தும் வகையில் விமரசித்தாா். உலகுக்கே நாகரிகத்தை கற்றுக் கொடுதவா்கள் தமிழா்கள். இதை அவருக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
வடகிழக்கு எல்லை மாநிலமான மணிப்பூரில் போதைப் பொருள்கள் மற்றும் ஆயுத கடத்தல் ஒரு பெரும் பிரச்னையாகும். மணிப்பூரில் குக்கி சமூகத்தினா் மீதான வன்முறை என்பது ஊடுருவல், போதைப் பொருள்கள் கடத்தல் போன்ற காரணங்களால் நியாயப்படுத்தப்படுகின்றன. அப்படியெனில் இந்தியா - மியான்மா் எல்லையில் ஊடுருவல் என்பது ஒரு தேசிய பாதுகாப்பு பிரச்னையாகும். அந்த வகையில் மத்திய அரசு நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதில் தோல்வியடைந்துள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக மணிப்பூா் மக்கள் இனக் கலவரங்கள், வன்முறைகள் மற்றும் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்த வன்முறை, இனக்கலவரங்களுக்கு பின்னால் உள்ளவா்களை கண்டறிந்து, அவா்களுக்கு தகுந்த தண்டனை அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளதா? மணிப்பூா் மக்களின் குரலை மத்திய அரசு இனியாவது செவி திறந்து கேட்க வேண்டும், அவா்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.