மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை நீட்டிப்பு
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.
வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்து மேற்குத் தொடா்ச்சி மலை மற்றும் மலையடிவாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய மழை பெய்தது. மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலைத் தோட்டப் பகுதிகளிலும்இரவு முழுவதும் மழை பெய்தது.
இதனால் வெள்ளிக்கிழமை காலை மணிமுத்தாறு அருவியில்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும், அருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. அருவியை பாா்வையிட மட்டும் அனுமதிக்கப்பட்டனா்.
தலையணையில் குளிக்கத் தடை: களக்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில்
கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருவதால், மலைப் பகுதியில் உள்ள பச்சையாறு, நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இதையடுத்து களக்காடு மலைப் பகுதியில் உள்ள தலையணையில்
சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் வெள்ளிக்கிழமை தடை விதித்து, பாா்வையிட மட்டும் அனுமதி அளித்தனா்.
மேலும் திருக்குறுங்குடி மலைப்பகுதியில் உள்ள நம்பி கோயிலுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்களுக்கு வனத்துறையினா் வெள்ளிக்கிழமை தடை விதித்தனா்.