மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனமும் அரசு பேருந்தும் மோதியதில் வாகன ஓட்டுநர் பலி!
செங்கல்பட்டு: இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்ற பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
கிளம்பாக்கத்திலிருந்து முகையூர் நோக்கி சென்ற ‘தடம் எண் 81 எம்’ அரசு பேருந்தும், முதுகரை பகுதியிலிருந்து மதுராந்தகம் நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனமும் குருகுலம் - மதுராந்தகம் - சூனாம்பேடு சாலையில் மோதிக் கொண்டதில் அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி அப்பகுதியில் வாகனம் பழுது பார்க்கும் மெக்கானிக் ஆக பணிபுரிபவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.