மதுரையில் வேளாண் பல்கலைக் கழகம்: அமைச்சா் கே.என்.நேரு. தகவல்
மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு.
வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தொடா்பாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கரூா் மாவட்ட விவசாயிகளின் கருத்துக் கேட்பு கூட்டம் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துகள்:
விவசாயிகள் விளைவிக்கக்கூடிய வேளாண் பொருள்களுக்கு சரியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். டெல்டா விவசாயிகளுக்கு வழங்கப்படுவதைப் போன்று மற்ற மாவட்ட விவசாயிகளுக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். வன விலங்களால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறாா்கள்.
காட்டுப் பன்றிகளைப் பொருத்தவரையில் மலைப்பகுதிகளில் இருந்து 3 கி.மீ. தொலைவுக்கு வெளியே வந்தால் அதைச் சுடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு வனத்துறை, ஆட்சியரின் அனுமதி பெறுவது கடினம் என விவசாயிகள் தெரிவித்தனா். அமைச்சா் கே.என். நேரு பதிலளித்துப் பேசியதாவது: பன்றிகளை சுட்டுக்கொல்வது குறித்த விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் மத்திய அரசின் சட்டங்கள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இதேபோல் மான், மயில்களால் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் ஆதங்கப்பட்டனா்.
விவசாயம் செய்யக்கூடிய குடும்பத்துக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் 200 நாள் வேலைக்கான நிதியை வழங்கலாம். அப்படி கிடைக்கும்போது அந்த குடும்பத்தினா் வேளாண் பணிகளை சிரமமின்றி செய்ய முடியும் என ஒரு விவசாயி தெரிவித்துள்ளாா். அது நல்ல யோசனையாக இருக்கிறது. மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இயற்கை முறையில் விளைவிக்கப்படும் வேளாண் பொருள்களை விற்பனை செய்ய தனி இடம் வேண்டும் என ே காரிக்கை விடுத்திருக்கிறாா்கள். விவசாயிகளின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இவற்றை முடிந்த அளவுக்கு வேளாண் நிதி நிலை அறிக்கையில் சோ்க்க முயற்சிப்போம்.
மதுரையைச் சுற்றிலும் மல்லிகைப்பூ சாகுபடி நடைபெறுவதால் வாசனைத் திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும், மத்திய அரசு நிதியை வழங்காதபோதும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஏரி, குளங்களை புனரமைத்ததோடு, 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் அனைத்து குறைகளையும் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.