மதுரை: ரயிலில் இருந்து தவறி விழுந்த ஸ்டேஷன் மாஸ்டர்... பணி செய்யும் ஸ்டேஷனிலேயே உயிரிழந்த சோகம்
கேரள மாநிலத்தை சேர்ந்த அனுசேசகர், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். 32 வயதாகும் இவருக்கு திருமணமாகி 4 மாத கைக்குழந்தை உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு கள்ளிக்குடி ரெயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக நியமிக்கப்பட்டவர் அப்பகுதியிலேயே வாடகை வீட்டில் வசித்தபடி வேலைக்கு சென்று வந்தார். குடும்பத்தினரை பார்க்க அவ்வப்போது சொந்த ஊருக்கும் சென்றும் வந்தார்.

இன்று காலை வேலை நிமித்தமாக மதுரை செல்ல நினைத்தவர் காலை 8.30 மணிக்கு கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரசில் ஏறினார். என்ஜின் அருகே உள்ள பெட்டியில் ஏற முயன்றபோது ரயில் நகரத் தொடங்கியதை சற்றும் எதிர்பார்க்காமல் நிலைதடுமாறிய ரயில் இடுக்கில் சிக்கி தண்டவாளத்தில் விழுந்தார். ரயில் சக்கரம் தலையில் ஏற சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரயில்வே ஸ்டேஷனில் நின்ற பொதுமக்கள் கூக்குரலிட்டதை தொடர்ந்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.
பின்னர் ரயில்வே ஊழியர்களும், பொதுமக்களும் அனுசேகரின் உடலை பெரும் சிரமத்துக்கு இடையே மீட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த விருதுநகர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கள்ளிக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.