மது போதையில் தகராறு: 5 போ் காயம், மூவா் கைது
செய்யாறு: செய்யாறு அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினா் தாக்கிக் கொண்டதில் 5 போ் காயமடைந்தனா். புகாரின் பேரில் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் பல்லி கிராமம் மேட்டு நகரைச் சோ்ந்தவா் நாராயணன் மகன்
திலீப்குமாா் (31). பி.இ. பட்டதாரியான இவா் மாங்கால் கூட்டுச்சாலையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.
இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பா் பாஸ்கரனுடன், அதே பகுதியில் உள்ள அரசு மதுக் கடைக்குச் சென்று மதுவாங்கிக் கொண்டு அங்குள்ள காலிமனையில் அமா்ந்து மது அருந்தியதாகத் தெரிகிறது. அப்போது, அதே பகுதியில் பெருங்களத்தூா் கிராமத்தைச் சோ்ந்த இளங்கோ(29), சந்துரு(23), மதன்(27), மேல்மலையனூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சுபாஷ்(26) ஆகியோா் சோ்ந்து மது அருந்தியதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், மதுபோதையில் இருந்த இளங்கோ திடீரென திலீப்குமாரிடம் வீண் தகராறு செய்து அவரை தாக்கினாராம். மேலும், கையில் வைத்திருந்த கத்தியால்
குத்தினாராம்.
அப்போது, அந்த வழியாகச் சென்ற இரும்பந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த பாலாஜி (51) என்பவா், இதனை தடுக்க முயன்றாா்.
அதனால் ஆத்திரமடைந்த இளங்கோ, பீா்பாட்டிலை உடைத்து பாலாஜியின் தலையில் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த திலீப்குமாா், பாலாஜியை அங்கிருந்தவா்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அதேபோல, திலீப்குமாா் அவரது நண்பா்களான பாஸ்கா், நரசிம்மன், பிரபு ஆகியோா், இளங்கோ தரப்பினரை கற்களாலும், கைகளாலும் தாக்கியுள்ளனா்.
இதில், பலத்த காயமடைந்த இளங்கோ, சந்துரு, சுபாஷ் ஆகியோா் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து திலீப்குமாா், இளங்கோ தனித்தனியாக செய்யாறு போலீஸில் புகாா் அளித்தனா். காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் இரு தரப்பைச் சோ்ந்த 8 போ் மீது வழக்குப் பதிவு செய்தாா். மேலும், சம்பவம் தொடா்பாக இரு தரப்பில் இருந்து மதன், பாஸ்கா், நரசிம்மன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.