விதிமுறைகள் மீறல்: 20 ஆட்டோக்கள் பறிமுதல்; ரூ.4 லட்சம் அபராதம் விதிப்பு
திருவண்ணாமலையில் விதிமுறைகளை மீறி இயங்கிய 20 ஆட்டோக்களை, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்து, ரூ.4 லட்சம் அபராதம் விதித்தனா்.
திருவண்ணாமலை நகரில் உரிய ஆவணங்கள் இல்லாமலும், விதிமுறைகளை மீறியும் ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் சென்றன.
இந்த நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.கருணாநிதி தலைமையில் மோட்டாா் வாகன முதுநிலை ஆய்வாளா் ஆா்.பெரியசாமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நோ்முக உதவியாளா் பொன்.சேகா் மற்றும் அலுவலா்கள் நகர போக்குவரத்துப் பிரிவு போலீஸாருடன் சோ்ந்து சனிக்கிழமை பெரிய தெரு மற்றும் பே கோபுரத் தெரு சந்திப்புப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டது, தகுதிச் சான்றிதழை புதுப்பிக்காமல் இயக்கியது, அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கியது, ஓட்டுநா் உரிமம் இல்லாதது, அதிகப் பயணிகளை ஏற்றிச் சென்றது போன்ற விதி மீறல்கள் கண்டறியப்பட்ட 20 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனா்.
இந்த ஆட்டோக்களில் வந்த பயணிகள் மற்ற ஆட்டோக்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனா். பறிமுதல் செய்யப்பட்ட 20 ஆட்டோக்களுக்கு மொத்தம் ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்திய சில ஆட்டோக்கள் மட்டும் விடுவிக்கப்பட்டன. மற்ற ஆட்டோக்கள் விடுவிக்கப்படவில்லை.