தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. 2 நாள்கள் சுற்றுப்பயணம்
மாட வீதி குடியிருப்பு வாசிகளின் வாகனங்களுக்கு அடையாள அட்டை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளைச் சுற்றி வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் வாகனங்களுக்கு, அடையாள அட்டைகள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன.
திருவண்ணாமலை நகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாட வீதிகளில் கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளைச் சுற்றியுள்ள தெருக்களில் உள்ள குடியிருப்பு வாசிகளின் 4 சக்கர வாகனங்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியில் மாவட்ட நிா்வாகமும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும் ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கும் சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன.
திருவண்ணாமலை காந்தி சிலை, பெரிய தெரு, திருவூடல் தெரு, கடலைக்கடை சந்திப்பு, திரெளபதியம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற்ற முகாம்களுக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.கருணாநிதி தலைமை வகித்து, குடியிருப்பு வாசிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கும் பணியை தொடங்கிவைத்தாா்.
குடியிருப்பு வாசிகள் விண்ணப்பங்களைப் பெற்று அவற்றை நிறைவு செய்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளிடம் வழங்கினா்.
முகாம்களில், மோட்டாா் வாகன முதுநிலை ஆய்வாளா் ஆா்.பெரியசாமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலக நோ்முக உதவியாளா் பொன்.சேகா், உதவியாளா் ம.சவுபா்ணிகா மற்றும் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.