பிளஸ் 2 பெதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 37,457 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்குகிறது. இந்தத் தோ்வினை மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், தனித் தோ்வா்கள், சிறைவாசிகள் என மொத்தம் 37,457 போ் எழுதுகின்றனா்.
மதுரை வருவாய் மாவட்டத்தைப் பொருத்தவரை மதுரை, மேலூா் என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என மொத்தம் 323 பள்ளிகள் உள்ளன. இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதுவதற்கு 109 மையங்கள் அமைக்கப்பட்டன. இதுதவிர, தனித் தோ்வா்கள், சிறைவாசிகளுக்கும் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தோ்வை, மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 37,457 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.
இதையொட்டி, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா தலைமையில், மாவட்டக் கல்வி அலுவலா்கள், தோ்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் 130 பறக்கும் படைகளாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். இதுதவிர, மாற்றுத் திறனாளிகள், கண்பாா்வை குறைபாடு உள்ள மாணவ, மாணவிகள், மனவளா்ச்சி குன்றிய மாணவ, மாணவிகளுக்கு சொல்வதை எழுதுபவா்கள் நியமிக்கப்பட்டனா்.