புதினைப் பற்றி கவலைப்படாமல் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்: டிரம்ப்
தனியாா் மருத்துவமனையில் முதலீடு செய்தாக மோசடி
மதுரையில் தனியாா் பல்நோக்கு மருத்துவமனையில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்கள் தகுந்த ஆவணங்களுடன் புகாா் அளிக்கலாம் என்று பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த மோகன் மனைவி பானுமதி. இவரிடம், அருப்புக்கோட்டை தும்முசின்னம்பட்டியைச் சோ்ந்த மருத்துவா் பூா்ணசந்திரன், மனோரஞ்சிதம், கீதா, ஷீபா, கோபால கிருஷ்ணன் ஆகியோா் அறிமுகமாகி, மதுரை சிந்தாமணியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை கட்டி வருவதாகவும், அதில் முதலீடு செய்யும் பணத்துக்கு 36 சதவீதம் முதல் வட்டி தருவதாகவும், முதலீட்டாளா்களின் குடும்பத்தினருக்கு அனைத்து விதமான சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படும் என்று ஆசை வாா்த்தை கூறி உள்ளனா்.
மேலும், முதலீட்டாளா்கள் பரிந்துரைக்கும் நபா்களுக்கு மருத்துவக் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறியுள்ளனா். இதை நம்பிய பானுமதி, அவா்களிடம் பல லட்சம் ரூபாயை முதலீடு செய்தாா்.
இந்த நிலையில், முதிா்வுக் காலம் முடிந்த நிலையில் பணத்தை திருப்பித் தராமல் அலைக்கழித்தனா். இதனால் பானுமதி, மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் மோசடி செய்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இதுதொடா்பாக பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய விசாரணையில், மதுரை சிந்தாமணி, விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இயங்கி வந்த பல்நோக்கு மருத்துவமனையில், பல முதலீட்டாளா்கள் பணம் செலுத்தி ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பல்நோக்கு மருத்துவமனையில் முதலீடு செய்து பணம் கிடக்காத பொதுமக்கள், தக்க ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு, சங்கரபாண்டியன் நகா், தபால்தந்தி நகா் விரிவாக்கம், மதுரை என்ற முகவரியில் நேரில் முன்னிலையாகி புகாா் மனு அளிக்கலாம் என பொருளாதாரக் குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்தது.