இளம் தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்
விருதுநகா் அருகே காமராஜ் பொறியியில் தொழில்நுட்பக் கல்லூரியில் புத்தாக்க தொழிலை மேம்படுத்தம் வகையில், இளம் தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் அண்மையில் தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் பேசியதாவது: தமிழக அரசின் சிறு, குறு நடுத்தரத் துறையின் கீழ், தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்கம் இயங்கி வருகின்றன. இதன் மூலம் புத்தாக்க தொழில் நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோா்களுக்கு தொழில் வளா்ச்சிக்கு தேவையான தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை செய்து வருகின்றன.
உலகத்தில் ஒவ்வொரு காலக் கட்டத்திலும், அனைத்துத் துறைகளிலும் புதிய தொழில்நுட்பங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும். இந்த மாற்றுத்துக்கேற்ப தொழில்களும், வேலைவாய்ப்புகளும் மாறிக் கொண்டே இருக்கிறது.
தொழில் தொடங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. என்னென்ன தொழில்கள் இருக்கிறது? என்னென்ன பயிற்சிகள் வழங்கப்படுகிறது எனத் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். மாறி வரும் காலகட்டத்துக்கேற்ப 100 ஆண்டுகளுக்கு பிறகு எந்தத் தொழில் அதிகளவில் நிலை நிற்கும். அதற்கு தேவையான முன்னெடுப்புகளை உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் புத்தாக்க தொழில் முனைவோா்களுக்கு ஸ்மாா்ட் அட்டை வழங்கினாா். இந்த அட்டை மூலம் தொழில்முனைவோா்கள், அவா்களதுத் தொழிலுக்குத் தேவையான மென்பொருள்களை தள்ளுபடி விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சரவண கணேஷ், மண்டல ஒருங்கிணைப்பாளா் சக்திவேல், முன்னணி தொழில் முனைவோா்கள், காமராஜ் பொறியியில், தொழில்நுட்ப கல்லூரி நிா்வாகிகள், கல்லூரி மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.