'மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறையில்லை' - கொதிக்கும் மீனவர்கள்
சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க இடையிலான சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவும் இலங்கையும் கூட்டாண்மையை விரிவுபடுத்துவதற்கான எதிர்கால நோக்கத்தை ஏற்றுக்கொண்டன. விரைவில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடிக்க முடிவு செய்துள்ளன. மின்சார இணைப்பு மற்றும் பெட்ரோலிய குழாய்களை நிறுவுவதன் மூலம் ஆற்றல் உறவுகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இந்த முடிவு பரந்த அளவிலான பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல், எரிசக்தி இணைப்பு ஆகியவை ஒத்துழைப்பின் முக்கிய தூண்களாக இருக்கும். இலங்கையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை இந்தியா வழங்கும்.
ராமேஸ்வரம், தலைமன்னார் இடையே படகு சேவை தொடங்கப்படும். எங்கள் பாதுகாப்பு நலன்கள் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொள்கிறோம். பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் முடிக்க முடிவு செய்துள்ளோம். மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் தொடர வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம். இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தின் விருப்பங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்று இந்தியா நம்புகிறது. இந்தியா இதுவரை இலங்கைக்கு 5 பில்லியன் டாலர் கடன் மற்றும் மானிய உதவிகளை வழங்கியுள்ளது. இலங்கையின் 25 மாவட்டங்களிலும் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு உள்ளது. இந்தியாவின் திட்டங்களின் தேர்வு எப்போதும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்பதை அடிப்படையாகக் கொண்டது" என்றார்.
தொடர்ந்து பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க, "இலங்கை அதிபரான பிறகு, இது எனது முதல் வெளிநாட்டு பயணம். டெல்லிக்கு வர முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு வழங்கப்பட்ட அழைப்பிற்காகவும், நான் உட்பட ஒட்டுமொத்த தூதுக் குழுவிற்கும் அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காகவும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் மேம்பட வேண்டும். இரு நாடுகளுக்கும் தொல்லையாக மாறியுள்ள மீனவர் பிரச்னைக்கு நீடித்த மற்றும் நிலையான தீர்வை காண விரும்புகிறோம். இலங்கையை ஒட்டிய இந்திய பகுதியில் இழுவை படகுகள் மூலம் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. அந்தப் பகுதியில் உள்ள மீனவர்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனெனில், அது இந்தத் தொழிலுக்கு அழிவை ஏற்படுத்தும்.
பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் இந்தியா மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. எனவே, இலங்கையும் அதே பாதையில் செல்கிறது. இவ்விஷயத்தில் ஆதரவளிப்பதாக பிரதமர் மோடி எனக்கு உறுதியளித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை நாங்கள் சந்தித்தோம். அந்த புதைகுழியில் இருந்து வெளிவர இந்தியா எங்களுக்கு பெரிதும் உதவியது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது என்பதை நான் அறிவேன். சமூக பாதுகாப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவை நம் நாட்டு மக்கள் எங்கள் இரு தரப்பையும் அதிகாரத்திற்குத் தேர்ந்தெடுத்ததற்கான அடிப்படைக் காரணங்கள்" என்றார்.
`பிரச்னைகளுக்குத் தீர்வு...’
பிறகு வெளியான கூட்டறிக்கையில், "இரு தரப்பு மீனவர்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஏற்றுக்கொண்டு, வாழ்வாதார பிரச்னைகளை காரணியாகக் கொண்டு, மனிதாபிமான முறையில் இவற்றைத் தொடர்ந்து தீர்க்க வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆக்ரோஷமான நடத்தை அல்லது வன்முறையைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற 6-வது கூட்டுச் செயற்குழுக் கூட்டத்தை அவர்கள் வரவேற்றனர். பேச்சுவார்த்தை மற்றும் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மூலம் நீண்ட கால மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட முடியும் என்ற நம்பிக்கையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள சிறப்பான உறவைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் தொடர்ந்து ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
`ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’
இதுகுறித்து நம்மிடம் பேசிய மீனவர் சங்கத்தினர், "1983ல் இனக்கலவரம் தொடங்கிய பிறகு மீனவர்கள் மீதான தாக்குதல் தொடங்கியது. ஆரம்பத்திலேயே மத்திய அரசு இதற்கெல்லாம் நடவடிக்கை எடுத்து சரிசெய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அலட்சியம் காட்டியதால் கச்சத்தீவு இலங்கை பக்கம் சென்றது. மேலும் ராணுவத் தளவாடங்களும் அமைக்கப்பட்டன. இதிலிருந்து தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மீன் கிடைக்காத பல நேரங்களில் எல்லையைத் தாண்டும் சூழல்தான் உள்ளது. இதற்கு மிகவும் குறைவான தொலைவு இருப்பது மட்டுமே காரணம். இதையெல்லாம் தடுக்க இருநாடுகளும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
`மாநில அரசும் அக்கறை செலுத்துவதில்லை’
மத்திய அரசுதான் இப்படியெல்லாம் செய்கிறது என்றால் மாநில அரசும் மீனவர்கள் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. மீன்பிடி தடைகால நிவாரணம் ரூ.8,000, மானிய விலையில் 2,000 லிட்டர் டீசல், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது, மீன்பிடி தடை காலத்தை 45 நாட்களாக குறைப்பது என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பல மீனவ கிராமங்கள் கடல் அரிப்பினால் அழிவு நிலையில் இருக்கிறது. அங்கு தூண்டில் வளைவு அமைக்க கோரி தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் அரசு செவி சாய்க்கவில்லை. மீனவர்களை ஓட்டுவங்கியாக மட்டுமே பார்க்கிறார்கள்.
இதேபோல் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட படகுகளை இலங்கை ராணுவம் சிறை பிடித்து வைத்திருக்கிறது. இவற்றின் விலை தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை இருக்கிறது. இலங்கை ராணுவத்தின் அட்டூழியத்தால் படகுகளை பறி கொடுத்தவர்கள் பசியும், பட்டினியுமாக வாடிக்கொண்டிருக்கிறார்கள். சிறை பிடிக்கப்பட்ட படகுகளை மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் தமிழக அரசு அலட்சியமாக இருக்கிறது. மேலும் கடற்கரையும், கடலையும் ஆக்கிரமிக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 14 மாவட்டங்களில் மீனவர்கள் அடர்த்தியாக மீன்பிடி தொழில் செய்து வரும் நிலையில், போதுமான இடமோ, மீன்வளமோ இல்லை. இந்த நிலையில் கடலில் காற்றாலைகள் அமைப்பதாக கூறுவது எங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்" என்றனர்.