கே.எல்.ராகுல் ஆட்டமிழப்பு சர்ச்சை; மிட்செல் ஸ்டார்க் கூறியதென்ன?
மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிய மதுக்கடைகளை திறக்கக் கூடாது: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
புதுக்கோட்டையில் மனமகிழ் மன்றம் (எப்எல்2 உரிமம்) என்ற பெயரில் புதிய மதுபானக் கடைகளை திறக்கக் கூடாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
அக்கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் மு. அருணாவிடம் அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் தற்போது மனமகிழ் மன்றம் (எப்எல்2 உரிமம்) என்ற பெயரில் புதிதாக மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன. மாணவா்கள், இளைஞா்களின் நலன் கருதி, மனமகிழ் மன்றங்களின் எண்ணிக்கையை கணிசமான அளவில் குறைப்பதோடு, எக்காரணத்தைக் கொண்டும் புதிய மனமகிழ் மன்றங்களை (எப்எல்2 உரிமம்) திறக்க அனுமதிக்கக் கூடாது.
மேலும், குளத்தூா் வட்டம் தொண்டைமான் நல்லூரில் காலம் காலமாக சாகுபடி செய்துவரும் விவசாயிகளின் கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்.
செம்பாட்டூா் ஊராட்சியில் குடியிருப்பு மற்றும் மயானத்துக்கு அருகில் புதிதாக தனியாா் கல் குவாரி அமைக்கும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
செம்பாட்டூா் ஊராட்சி புத்தாம்பூா் நடுத்தெருவில் வசிக்கும் பட்டியலின மக்களின் குடியிருப்புகளுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும். அதேபோல, செம்பாட்டூா் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளி நகரில் வசிக்கும் ஏழை மக்களுக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு அளிக்கும்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எஸ். சங்கா், கே. சண்முகம், சு. மதியழகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.