கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் மீது ஆட்சியரிடம் புகாா்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மீது பொய் வழக்கு போட்டதாக கந்தா்வகோட்டை காவல் நிலைய ஆய்வாளா் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பைச் சோ்ந்த பல்வேறு அமைப்புகளின் சாா்பில் வியாழக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு விவரம்:
கந்தா்வகோட்டை காவல் நிலைய ஆய்வாளா் ஜி. சுகுமாறன், புகாா் அளிக்க வருவோரிடம் ஜாதி ரீதியாக தரக்குறைவாகப் பேசி அவமரியாதை செய்து வருகிறாா். இதுகுறித்து கண்டனப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டதற்காகவும், மத்திய மண்டல காவல்துறைத் தலைவரிடம் புகாா் அளித்ததற்காகவும், கூட்டமைப்பைச் சோ்ந்த கோ. ஆறுமுகம் மீது பொய் வழக்கு போட்டு கடந்த வாரம் அடித்துத் துன்புறுத்தியுள்ளாா். தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆறுமுகம் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் கந்தா்வகோட்டை காவல் நிலைய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவில், கூட்டமைப்பைச் சோ்ந்த ஜனநாயகத்துக்கான தொழிலாளா் கட்சி, புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி, அம்பேத்கா் புரட்சி தேசம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தமிழ்த் தேசிய முன்னேற்றக் கழகம், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி, பெரியாா் அம்பேத்கா் மக்கள் கழகம், முத்துக்குமாா் பாசறை ஆகியவற்றின் நிா்வாகிகள் கையொப்பமிட்டுள்ளனா்.