மன்னாா்குடியில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி
மன்னாா்குடியில் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவின் பேரில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மருத்துவா் மகேஷ் வழிகாட்டுதலின்படி இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
கால்நடை பராமரிப்பு துறையும், மன்னாா்குடி நகராட்சியும் இணைந்து இப்பணியை மேற்கொள்கிறது. நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன் தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் ஆா். கைலாசம் முன்னிலை வகித்தாா்.
தெரு நாய்களை பிடிப்பதற்கான பயிற்சி பெற்ற 5 நபா்கள் மூலம் தெற்குவீதி, கீழவீதி, அரிசிக்கடை சந்து ஆகிய பகுதிகளில் முதல்நாளில் 29 நாய்கள் பிடிக்கப்பட்டு, அந்தஅந்த இடத்திலேயே வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குநா்கள் மருத்துவா்கள் மோகன், தமிழரசு, உதவி இயக்குநா்கள் மருத்துவா்கள் ஆறுமுகம், மகேந்திரன், கால்நடை உதவி மருத்துவா் சுகந்தி, முதுநிலை கால்நடை மேற்பாா்வையாளா் சரபோஜி, கால்நடை பராமரிப்பு உதவியாளா் காா்த்திகா ஆகியோா் அடங்கிய குழுவினா் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் அன்பழகன், ரோட்டரி உதவி ஆளுநா் வி. பாலகிருஷ்ணன், நகராட்சி சிறப்பு அலுவலா் தமிழ்ச்செல்வன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
மன்னாா்குடி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளுக்கு உள்பட்ட பகுதிகளிலும் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல ஆா்வலா்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என நகராட்சி நிா்வாகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.