திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
மயிலாடுதுறை அருகே வாய்க்காலில் வீசப்பட்ட மருந்து, மாத்திரைகள்
மயிலாடுதுறை அருகே வாய்க்காலில் மருந்து, மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையை அடுத்த குளிச்சாறு கிராமத்தில் உள்ள வடிகால் வாய்க்கால் தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை வாய்க்காலை தூா்வாரியபோது, தமிழக அரசால் வழங்கப்பட்ட மருந்து, மாத்திரைகள் ஒரு பெரிய சாக்கு மூட்டையில் நிரப்பப்பட்டு, வாய்க்காலில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதில், ஆயிரக்கணக்கான மாத்திரைகள், சிரப், ஓ.ஆா்.எஸ். கரைசல், ஊசிகள் ஆகியன இருந்தன. அவற்றில் சில மருந்துகள் காலாவதி தேதியை கடந்திருந்தாலும், பல மாத்திரை, மருந்துகளில் காலாவதி தேதி அடுத்த ஆண்டு வரை உள்ளது தெரிய வந்தது.
அண்மையில் இப்பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்ற நிலையில், அதில் பயன்படுத்தியது போக மீதமிருந்த மருந்துகளை வாய்க்காலில் வீசிச் சென்றிருக்கலாம் என கிராம மக்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பானுமதி கூறுகையில், இந்த மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இருந்து கொண்டு வரப்பட்டதாக தெரியவில்லை. ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து எடுத்துச் சென்று வீசியிருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சுகாதாரப் பணிகள் துணை இயக்குநருக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது என்றாா்.
அரசு மருத்துவமனைகளில் பல மருந்துகள் இருப்பு இல்லை எனக் காரணம் காட்டி, தனியாா் மருந்தகங்களில் இருந்து வாங்கிவர மருத்துவா்கள் வலியுறுத்தும் நிலையில், மருந்து, மாத்திரைகளை வாய்க்காலில் வீசிச்சென்றவா்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.