மருதமலை கோயிலில் வெள்ளிவேல் திருட்டு! நாளை கும்பாபிஷேகம்...
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், கோயிலில் இருந்த வெள்ளிவேல் திருடுபோனது தெரியவந்துள்ளது.
சாமியார் வேடத்தில் ஒருவர் வெள்ளிவேலை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்திருக்கும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக அழைக்கப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகைதருவார்கள் என்பதால் போலீசார் தீவிர முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இன்றுமுதல் போக்குவரத்து மாற்றப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை வெள்ளிவேல் காணாமல் போனது தெரியவந்துள்ளது. உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், புதன்கிழமை பிற்பகலில் சாமியார் வேடமணிந்த ஒருவர் வெள்ளிவேலை திருடிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மூலவரிடம் வைக்கப்பட்டிருந்த ரூ. 4 லட்சம் மதிப்பிலான இரண்டரை அடி வெள்ளி வேல் காணாமல் போயுள்ளது.
நாளை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், முருகனின் வேல் காணாமல் போயிருப்பது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.