மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலும் வாய்ப்பைப் பெற்றனர். அந்த மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ் இடங்கள், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 494 எம்பிபிஎஸ் இடங்கள், 119 பிடிஎஸ் இடங்கள் வழங்கப்படுகின்றன.
இவை தவிர தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,736 எம்பிபிஎஸ், 530 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
மொத்தம் 72,743 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்களின் தரவரிசைப் பட்டியல் கடந்த 25-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 39,853 பேரும், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் 4,062 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் 28,279 பேரும் இடம்பெற்றனர். இந்த நிலையில், சிறப்பு பிரிவு (மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர்) கலந்தாய்வு மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 613 பேர் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை பெற்றனர். கலந்தாய்வில் சிறப்பு பிரிவில் 86 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் உள்பட அனைத்து கட்டணங்களையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது என்றார்.
ஏழை குடும்பங்களைச் சேர்ந்த...: 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் விவசாயி, கூலி தொழிலாளி உள்பட ஏழை குடும்பத்தைச் சேர்ந்த 613 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
குறிப்பாக, இந்த இடஒதுக்கீட்டின் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆவியூர் கிராமத்தை திருமூர்த்தி (நீட் மதிப்பெண் 572) என்ற மாணவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இணையவழியில் பொதுப் பிரிவு: அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு https://tnmedicalselection.net என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆக. 4-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, கல்லூரிகளில் இடங்களைத் தேர்வு செய்யலாம். ஆக. 5-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
இடஒதுக்கீடு விவரங்கள் ஆக. 6-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். ஆக. 6 முதல் 11-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை இட ஒதுக்கீட்டு ஆணையை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆக. 11-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும்.
நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ப.செந்தில்குமார், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொ) தேரணிராஜன், தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.