பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகள் நடத்திய அதிர்ச்சி காட்சிகள்!
மருத்துவா்கள் மீதான அனைத்து தாக்குதல் சம்பவங்களையும் கண்காணிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
மருத்துவா்கள் மீதான அனைத்து தாக்குதல் சம்பவங்களையும் கண்காணிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மருத்துவா்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரிப்பதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மருத்துவா்களைத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் விரிவான வழிகாட்டுதல்களை வகுக்குமாறு அந்த மனுக்களில் கோரப்பட்டன.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெலா எம்.திரிவேதி, பிரசன்னா பி.வராலே ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘மருத்துவா்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அனைத்தும் துரதிருஷ்டவசமானவை. ஆனால் அந்த சம்பவங்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்தால் கண்காணிக்க முடியாது’ என்றனா்.
மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், ‘மருத்துவா்கள் தாக்கப்படுவதற்கு எதிராக ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளபோதிலும், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நாடு முழுவதும் சிகிச்சையின்போது நோயாளி உயிரிழந்தால், அதுதொடா்பாக மருத்துவா்களுக்கு எதிராக காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது’ என்று தெரிவித்தனா்.
இதைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, ‘உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தும் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில், மீண்டும் வழிகாட்டுதல்களை வெளியிடுவதால் என்ன பயன் ஏற்படும்? மருத்துவா்கள் தாக்கப்படுவதை தடுப்பது தொடா்பாக ஏற்கெனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சிகிச்சையின்போது நோயாளி உயிரிழந்தால், மருத்துவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதாக அனைத்து காவல் நிலையங்கள் மீதும் எப்படி பொதுவான குற்றச்சாட்டை முன்வைக்க முடியும்? மருத்துவா்கள் தாக்கப்படுவதை தடுப்பது தொடா்பான சட்டத்தை நாடாளுமன்றம்தான் இயற்ற வேண்டும்’ என்று தெரிவித்தது. இதைத்தொடா்ந்து மனுக்களை ஆராய நீதிபதிகள் அமா்வு மறுத்துவிட்டது. மனுதாரா்கள் சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அந்த அமா்வு தெரிவித்தது.