சிரியா தலைநகரில்... இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில் 6 வீரர்கள் பலி!
மாங்கொட்டையில் விநாயகர் உருவம்; வண்ணங்களுக்கு பூக்களின் சாறு... அசத்தும் நீலகிரி பெண்!
விநாயகர் சதுர்த்தி தினமான இன்று நாடு முழுவதும் சிறப்பு விழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. விநாயகர் கோயில்கள் மட்டுமின்றி மக்கள் கூடும் பொது இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் 500 க்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர்.

விநாயகர் சிலைகளை பாதுகாக்க நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சில தினங்களில் நீர்நிலைகளில் கரைக்கப்பட இருக்கும் இந்த விநாயகர் சிலைகளில் ரசாயன பயன்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள எருமாடு பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசி சங்கீதா, களிமண், விதைகள் , பூக்களின் சாறு போன்றவற்றைக் கொண்டு இயற்கை முறையில் விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகிறார். சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இவர் உருவாக்கி வரும் விநாயகர் சிலைகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இது குறித்து தெரிவித்த சங்கீதா , " சுற்றுச்சூழலுக்கு உகந்த களிமண் மட்டுமின்றி பல்வேறு விதைகளையும் பயன்படுத்தி சிலைகளை செய்து வருகிறேன். குறிப்பாக வெட்டி வேர், வடு மாங்கொட்டைகளைக் கொண்டு விநாயகர் உருவத்தை வடிவமைத்து அதன் மீது களிமண் கலவையைக் கொண்டு பூசுகிறேன். வண்ணங்களுக்காக பூக்களின் சாற்றைப் பயன்படுத்துகிறேன். மேலும் இதில் பல விதைகளையும் சேர்க்கிறேன். ஒரு சிலையில் இருந்து ஒன்றிரண்டு விதைகள் முளைத்தால் கூட மகிழ்ச்சி தான் " என்றார்.