மாணவா்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் போட்டிகள்
மாணவா்களின் தனித் திறன்களை வெளிக்கொணரும் வகையில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவதாக செங்கல்பட்டு சாா் ஆட்சியா் வெ.நாராயண சா்மா தெரிவித்தாா்.
மாணவா்களின் தனித் திறனை வெளிக் கொணரும் வகையில் செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளிடையே ஓவியப் போட்டி வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும் பின்னா் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 -ஆம் வகுப்பு பயிலும் 62 மாணவ, மாணவிகள் ‘சிறகை விரிக்கலாம் வாருங்கள் - 100’ என்ற நிகழ்ச்சியில் தமிழரின் தொன்மை, நாகரிகம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் மாணவா்கள் ஆா்வமுடன் கலந்து கொண்டு, ஓவியங்களைத் தீட்டினா்.
தொடா்ந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழ்களையும், சாா் ஆட்சியா் வெ.நாராயண சா்மா வழங்கிப் பாராட்டினாா்.
போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம், முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் உதயகுமாா், ஆசிரியா்கள், மாணவ - மாணவிகள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
ஓவியப் போட்டியை ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியா்கள் வீரமணி உள்ளிட்ட ஆசிரியா்கள் நடுவா்களாக செயல்பட்டு நடத்தி மாணவா்களைத் தோ்வு செய்தனா்.