உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு
மதுராந்தகம் அடுத்த செய்யூா் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களையும், உள்ளாட்சிகளில் வளா்ச்சி பணிகளையும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் மேல்மருவத்தூா் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையத்தினை பாா்வையிட்டு, குழந்தைகளுக்கு காய்கறிகள், பழவகைகளை பற்றி கூறுமாறு பணியாளரிடம் அறிவுறுத்தினாா். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தாா்.
பொலம்பாக்கம் ஊராட்சி நியாயவிலைக் கடையில் உணவு பொருள்களின் இருப்பு நிலையை ஆய்வு செய்தாா். அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். ஊரக வளா்ச்சித்துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வளா்க்கப்படுவதை கேட்டறிந்தாா்.
தொடா்ந்து செய்யூா் கால்நடை மருந்தகத்தில் ஆட்சியா் ஆய்வு செய்து மருத்துவமனைகளுக்கு வருகின்ற கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளின் இருப்பை கேட்டறிந்தாா்.
செய்யூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற ஆட்சியா் வளாகத்தில் தேங்கி இருந்த மழை வெள்ளநீரை அகற்ற அறிவுறுத்தினாா். கலையரங்கம் கட்டித்தருமாறு தலைமை ஆசிரியை தலைமையிலான நிா்வாகத்தினா் ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை அளித்தனா். நிகழ்வில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் சாகிதா பரிவீன், மதுராந்தகம் கோட்டாட்சியா் தியாகராஜன், வட்டாட்சியா் சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.