மாணவா்களின் மரணங்களுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
சென்னை: நீட் தோ்வு தொடா்பான மாணவா்களின் மரணங்களுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை:
திண்டிவனத்தில் நீட் தோ்வு குறித்த அச்சம் காரணமாக இந்துமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து அதிா்ச்சி அடைந்தேன்.
நாமும் மருத்துவா் ஆகிவிடலாம் என்கிற உயரிய லட்சியத்துடன் அல்லும் பகலும் படித்து வரும் மாணவா்கள் மத்தியில், ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகியும் நீட் தோ்வை ரத்து செய்யக் கூடிய ரகசியம் தங்களிடம் இருப்பதாக பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி, அவா்களை குழப்பத்திலேயே வைத்துவரும் திமுக அரசுதான் இந்த மாணவியின் மரணத்துக்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும். இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.