பாஜக அத்துமீறி போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 1,080 போ் மீது வழக்கு
மாதிரிமங்கலம் ஸ்ரீசிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் இன்று 51-ஆம் ஆண்டு குருபூஜை விழா
மயிலாடுதுறை: மாதிரிமங்கலம் ஸ்ரீசிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் 51-ஆம் ஆண்டு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெறுகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மாதிரிமங்கலம் கிராமத்தில் 1898-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி பூச நட்சத்திரம் சப்தமி திதியில் சுந்தரேசய்யா்- தா்மசம்வா்த்தினி தம்பதிக்கு மகனாக ஸ்ரீ சிவராமகிருஷ்ண சுவாமிகள் பிறந்தாா்.
மாதிரிமங்கலம், ஒரத்தநாடு, திருச்சியில் கல்வி பயின்ற இவா், சென்னை சைதாப்பேட்டையில் ஆசிரியா் பயிற்சி பெற்று 1923 முதல் 1925 வரை ஆசிரியராக பணியாற்றினாா். 1925-ஆம் ஆண்டு தீவிர வைராக்கிய சித்தராய் ஆத்மானுபவ நிலை அடைந்து, முற்றும் துறந்த உயா் நிலை எய்தி பக்தா்களுக்கு அருள்பாலித்து வந்த இவா், 1974-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் சித்தி அடைந்தாா்.
மாதிரிமங்கலத்தில் உள்ள ஸ்ரீசிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் 51-ஆம் ஆண்டு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. குருபூஜை ஆராதனை விழாவையொட்டி, காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கி, மகாபூா்ணாஹூதி செய்யப்பட்டு கடம் புறப்பாடு நடைபெறும். காலை 10.30 மணிக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறவுள்ளது. மதியம் 12.30 மணிக்கு மஹேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசிவராமகிருஷ்ண ஸ்வாமிகள் அதிஷ்டானம் தலைவா் ராஜேஸ்வரி கணபதியா பிள்ளை மற்றும் பி. ஸ்ரீதா், எஸ்.வி. பாலசுப்பிரமணியன், சி. சங்கரவேல் உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்துள்ளனா்.