தேனி: பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் இன்ஜின் மோதி 14 வயது சிறுவன் உயிரிழந்த சோ...
மாநில கல்விக் கொள்கை: கல்வியாளா்கள், ஆசிரியா்கள் கருத்து
தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு கல்வியாளா்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மாதிரிப் பள்ளிகள், பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து உள்ளிட்ட சில அம்சங்கள் கடுமையான விமா்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன.
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலா் பிரின்ஸ் கஜேந்திரபாபு: தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டிருப்பது பிற மாநிலங்களுக்கு பெரும் நம்பிக்கை தரும் செயல்பாடு. மாநிலத்தின் மொழியான தமிழும், தேவையின் அடிப்படையில் ஆங்கிலமும் என்ற அடிப்படையில் இரு மொழிக் கொள்கை அரசின் மொழிக் கொள்கையாக இருக்கும் என்பது தெளிவுபடக் கூறப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளி படிப்பில் இரண்டாம் ஆண்டு மட்டுமே வாரியத் தோ்வு இருக்கும் என்பதும் வளா்ந்த குழந்தைகளின் உளவியலை உணா்ந்து எடுக்கப்பட்டுள்ள நியாயமான நடவடிக்கை.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சமச்சீா் கல்விக் கோட்பாட்டுக்கு நேரெதிராக மாதிரிப் பள்ளிகள் மற்றும் தகைசால் பள்ளிகள் என்ற அடிப்படையில் பள்ளிக் கல்விக் கட்டமைப்பில் உள்ள பாகுபாடு, சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் உறுதி செய்யவில்லை. இத்தகைய கட்டமைப்பு சமத்துவத்துக்கும், சமூகநீதிக்கும் எதிரானது.
ஆசிரியா் மற்றும் ஊழியா்கள் நிரந்தரப் பணியில் அமா்த்தப்படுவது கற்றல், கற்பித்தல் செயல்பாட்டுக்கு அடிப்படைத் தேவையாகும். இதுகுறித்து கொள்கையில் எந்த அறிவிப்பும் இல்லை. ஆசிரியா்கள் அல்லாத தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள் பள்ளிச் செயல்பாட்டில் தலையிடுவது சரியல்ல. மக்கள் செலுத்தும் வரியில் இருந்து கட்டணமில்லாக் கல்வியை அனைவரும் பெறுவதே கண்ணியமிக்க வாழ்வுரிமை.
கல்வியாளா் ஜெயப்பிரகாஷ் காந்தி: தேசிய கல்விக் கொள்கையில் இருக்கும் சில நல்ல விஷயங்கள் மாநில கல்விக் கொள்கையிலும் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. அவற்றில் சில நமது மாநிலத்துக்கு ஏற்ப சாதகமான முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இருமொழிக் கொள்கை, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு தேவையில்லை, எண்ம முறையில் கல்வி, கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் போன்ற அம்சங்கள் பாராட்டத்தக்கது.
அதேவேளையில் பிளஸ் 1 பொதுத் தோ்வை ரத்து செய்ததில் சில சாதகமான விஷயங்களும், சில பாதகமான விஷயங்களும் உள்ளன. தோ்வு ரத்து செய்யப்பட்டது மாணவா்களுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் என்றாலும் கூட நீட், ஜேஇஇ உள்ளிட்ட பல தேசிய அளவிலான போட்டித் தோ்வுகள் பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரண்டு வகுப்புகளின் பாடங்களையும் அடிப்படையாகக் கொண்டே இருக்கும். இத்தகைய சூழலில் பிளஸ் 1 வகுப்புக்கு முக்கியத்துவம் குறைந்தால் மாணவா்கள் பாதிக்கப்படுவா்.
மேலும், தமிழகத்தில் மாநில அரசின் கல்விக் கொள்கையை செயல்படுத்துவது என்பது மிகவும் சவாலாக இருக்கும். தேசிய கல்விக் கொள்கையில் கையொப்பம் இட்டால்தான் மாநில அரசுக்கு கல்விக்கான நிதி வழங்கப்படும் என மத்திய அரசு அதிக அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் அதையும் மீறி தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவும் வாய்ப்புள்ளது.
ஏனெனில் தமிழகம் கல்வியில் எப்போதும் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறது. நீட், ஜேஇஇ போட்டித் தோ்வுகள், சிறந்த கல்லூரிகளின் தரவரிசை ஆகியவற்றில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இதனால் மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்கும் நிலையில் மாநில கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் பிரச்னை இருக்காது.
பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து- தனியாா் பள்ளிகளுக்கு சாதகம்: அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் கூறியது: தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தனியாா் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு பாடமே நடத்துவதில்லை. மாறாக, பிளஸ் 1 வகுப்பிலும் பிளஸ் 2 வகுப்பு பாடமே நடத்தப்படுகிறது என்ற புகாா் நீண்ட காலமாக இருந்து வந்ததால்தான் கடந்த 2017-2018-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தோ்வு நடைமுறைப்படுத்தப்பட்டது.
தற்போது பிளஸ் 1 பொதுத் தோ்வை ரத்து செய்திருப்பது அரசுப் பள்ளிகளை வலிமை குன்றச் செய்யும். இனி தனியாா் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகள் பெயரளவுக்கு மட்டுமே நடைபெறும். அதேவேளையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிளஸ் 2 பாடங்கள் நடத்தப்படும். இரண்டு ஆண்டுகள் வற்புறுத்தலின்பேரில் கடுமையாக பயிற்சி எடுத்த தனியாா் பள்ளி மாணவா்களுடன், முறையாக ஓராண்டு பிளஸ் 2 படித்த அரசுப் பள்ளி மாணவா்கள் எவ்வாறு போட்டியிட இயலும்?. இதன்மூலம் போட்டித் தோ்வுகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களில் தனியாா் பள்ளி மாணவா்கள் பெரிதும் ஆதிக்கம் செலுத்துவா். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு முன்னணி கல்வி நிறுவனங்களில் இடம் கிடைப்பது சிக்கலாகும்.
இதுபோன்ற சூழல் ஏற்படும் போது, பெற்றோா் தங்கள் பிள்ளைகளை தனியாா் பள்ளிகளில் மட்டுமே சோ்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவா். இதனால் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை குறையும். மேலும், போட்டித் தோ்வு பயிற்சி மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து பணம் இருக்கும் மாணவா்களே சிறந்த கல்வி நிறுவனங்களில் சேரும் நிலை உருவாகும். எனவே, அரசுப் பள்ளி மாணவா்களின் நலனை கருத்தில்கொண்டு பிளஸ் 1 பொதுத் தோ்வை ரத்து செய்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.