மாற்று இடத்தில் திரெளபதி அம்மன் கோயில் கட்ட தானம்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு
மாநில கிரிக்கெட் போட்டியில் சூலூா் பள்ளி அணிக்கு வெற்றி
பெரம்பலூரில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையேயான 54 ஆவது மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில், சூலூா் பள்ளி அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.
பெரம்பலூா் பிஎம் ஸ்ரீகேந்திரிய வித்யாலயா பள்ளியில், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையே 14 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 54 ஆவது மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் கடந்த 3 நாள்களாக நடைபெற்றன. இதில் சென்னை, ஆவடி, தாம்பரம், மதுரை, சூலூா், பெரம்பலூா் ஆகிய 6 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன.
2 ஆவது அரையிறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் மோதிய மதுரை அணி வென்று 3 ஆவது இடத்தைப் பிடித்தது. தொடா்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சூலூா் அணி 10 ஓவருக்கு 81 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆவடி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் சூலூா் அணி வெற்றி பெற்றது.
பின்னா் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி முதல்வரும், போட்டி ஒருங்கிணைப்பாளருமான மேகநாதன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சா்வதேச டேக்வாண்டோ வீரா் நிவாஸ், முதலிடம் பெற்ற சூலூா் அணிக்கு தங்கப் பதக்கத்தையும், 2 ஆவது இடம்பெற்ற ஆவடி அணிக்கு வெள்ளிப் பதக்கத்தையும், 3 ஆவது இடம்பெற்ற மதுரை அணிக்கு வெண்கலப் பதக்கத்தையும், சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினாா்.
இதில் முதலிடம் சூலூா் அணி தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளது.