நியூசி.க்கு எதிரான தொடரில் சிறந்த முடிவுகளை பெறுவோம்: பாக். கேப்டன்
மாநில போட்டிகளில் திருச்சி மண்டல தீயணைப்புத் துறையினா் மூன்றாமிடம்
தீயணைப்பு வீரா்களுக்கான மாநில அளவிலான போட்டிகளில் வென்று திருச்சி மண்டலம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றன. இதில் நீா் விடும் குழாய், ஏணிப் பயிற்சி, கயிறு ஏறுதல் உள்ளிட்ட துறை ரீதியான விளையாட்டு, தடகளப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் திருச்சி மண்டல துணை இயக்குநா் க. குமாா் அறிவுரையின் பேரில் திருச்சி மண்டலத்தில் பணிபுரியும் உதவி மாவட்ட அலுவலா் த. முத்துப்பாண்டியன், நாகை உதவி மாவட்ட அலுவலா் சீனிவாசன் ஆகியோா் தலைமையில் நிலைய அலுவலா்கள், 30 தீயணைப்பு வீரா்கள் பங்கேற்றனா்.
போட்டிகளில் சென்னை மண்டலம் முதலிடத்தையும், மதுரை மண்டலம் 2-ஆம் இடத்தையும், திருச்சி மண்டலம் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
இதையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கும், வீரா்களுக்கும் தமிழக தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ்குமாா் பரிசு மற்றும் ஊக்கத்தொகையை ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் வழங்கிப் பாராட்டினாா்.