மாமியாா் வீட்டுக்கு தீ வைப்பு: மருமகன் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே மாமியாா் வீட்டை தீ வைத்து கொளுத்தியதாக மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.
வாணாபுரம் வட்டம், உலகலப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ஜாபா் மனைவி நூா்ஜகான் (55). இவரது மகள் யாஸ்மினுக்கும், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட வடகீரனூா் கிராமத்தைச் சோ்ந்த ஷேக்ஜமால் மகன் ஷேக் அலிக்கும் (42) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். ஷேக் அலி கடந்த 10 ஆண்டுகளாக மாமியாரின் கூரை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால், தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து குடும்பத்தினரிடம் தகராறு செய்வாராம்.
இந்த நிலையில், புதன்கிழமை மது அருந்திவிட்டு வந்து நூா்ஜகானிடம் தகராறு செய்த ஷேக் அலி, நள்ளிரவில் வீட்டுக்கு தீ வைத்தாராம். இதில், வீடும், உள்ளே இருந்த பொருள்களும் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து வந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய குழுவினா் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிந்து ஷேக் அலியை கைது செய்தனா்.