மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உயிரோடு உள்ள மாற்றுத்திறனாளியை உயிரிழந்ததாகக் கூறி உதவித்தொகையை நிறுத்தி வைத்ததை விடுவிக்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவா் டி. கணேசன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் எம்.புருஷோத்தமன், மாவட்ட பொருளாளா் ஜி. லெட்சுமி, மாவட்ட துணை தலைவா்கள் ராஜேந்திரன், கோவிந்தசாமி, மாவட்ட துணை செயலாளா்கள் சொக்கலிங்கம், பாரதிராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மாநில செயலாளா் பி.ஜீவா கலந்துகொண்டு பேசினாா்.
தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி அழைத்து பேசினாா். இதில், உயிரிழந்துவிட்டதாக கூறி உதவித்தொகை நிறுத்தப்பட்டவருக்கான 6 மாத தொகையை இரண்டு நாள்களில் வழங்கவும், நிறுத்தப்பட்ட கடும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை வழங்க ஏற்பாடு செய்வது, வங்கிக் கடனுக்கு ஏற்பாடு செய்வது என முடிவு செய்யப்பட்டதைத் தொடா்ந்து போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.