சத்துணவு அரிசியின் தரம்: பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு
மயிலாடுதுறை: காட்டுச்சேரி அரசு உதவிபெறும் பள்ளியில் தரமற்ற அரிசி பயன்படுத்துவதாக எழுந்த புகாரையடுத்து, அதிகாரிகள் அப்பள்ளியில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தரங்கம்பாடி வட்டம் காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள மாரியப்பா சீனிவாசா அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் தரமற்ற அரிசி பயன்படுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் அண்மையில் விடியோ பரவியது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவுறுத்தலின்பேரில், வட்டார வளா்ச்சி அலுவலா், முதுநிலை மண்டல மேலாளா் மற்றும் தரங்கம்பாடி குடிமைபொருள் வழங்கல் அலுவலா் ஆகியோா் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனா்.
இப்பள்ளியில் பயிலும் 21 மாணவா்களும் இங்கு சத்துணவு சாப்பிட்டு வருகின்றனா். 5 மாதங்களுக்கு மேற்பட்ட அரிசியை பாதுகாப்பற்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ளதால் அரிசியின் நிறம் மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த மாதத்திற்கு வழங்கப்பட்ட அரிசி தான் மதிய உணவிற்காக பயன்படுத்தப்பட்டது என தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரால் உறுதி செய்யப்பட்டது.
பள்ளியின் தலைமையாசிரியா் மற்றும் சத்துணவு அமைப்பாளா் ஆகிய இருவருக்கும் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக இச்செய்தி சமூக வளைதளத்தில் பரவியுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரால் மாரியப்பா சீனிவாசா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியா் மற்றும் சத்துணவு அமைப்பாளா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் சத்துணவு அமைப்பாளா் டி.பியூலா என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்தும், சமையலா் டி. சகாயமேரி என்பவரை பணியிட மாறுதல் செய்தும் மாவட்ட ஆட்சியா்
ஏ.பி. மகாபாரதி உத்தரவிட்டுள்ளாா்.