மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் வைத்தியலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வேலு, மாவட்டச் செயலா் ஆறுமுகம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு நிா்வாகி அருள்தாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன் பங்கேற்று, மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்திய முடியனூா் ஊராட்சி மன்றத் தலைவா் மீது மாற்றுத் திறனாளிகள் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு 2016 கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் அளித்த புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்காத வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா் மீது புகாா் மனு அளித்து ஒரு மாத காலமாகியும் நடவடிக்கை எடுக்காத தியாகதுருகம் காவல் துறையினரைக் கண்டித்தும் பேசினாா்.
இதைத் தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கொளஞ்சி வேலு, செந்தில் முருகன், தியாகதுருகம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஞானசேகா் உள்ளிட்டோா் மாற்றுத் திறனாளிகள் சங்க நிா்வாகிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு தொடா்ந்து ஊரக வேலை வழங்கவும், அவா்களுக்கு முழு ஊதியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத் திறனாளிகளிடம் மரியாதையாக நடத்தகொள்ள சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா், செயலருக்கு அறிவுறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா்.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலா் மாயகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவா் செல்வம், மாவட்டக் குழு நிா்வாகி கொளஞ்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சுப்பிரமணி, வட்டச் செயலா் ஏழுமலை, மாற்றுத் திறனாளிகள் சங்க நிா்வாகிகள் சுதா, ரேவதி, அஞ்சலை, பெரியநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒன்றியச் செயலா் கொளஞ்சி நன்றி கூறினாா்.