மா்ம விலங்கு கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழப்பு
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மா்ம விலங்கு கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த நல்லவன்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் ரகுபதி (25), விவசாயி. இவா், அதே பகுதியில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள அவரது தாய்மாமன் சேட்டு என்பவரின் விவசாய நிலத்தில் வளா்த்து வந்த 30 ஆடுகளை ஞாயிற்றுக்கிழமை மாலை பட்டியில் அடைத்துவிட்டு சென்றாா்.
திங்கள்கிழமை காலை வந்து பாா்த்த போது, 11 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். சம்பவ இடத்துக்கு வந்த கால்நடை மருத்துவா் முருகன் ஆய்வு செய்து ஆடுகளை நாய்கள் கடித்திருக்கக் கூடும் என்றாா்.
தனது வாழ்வாதாரமான ஆடுகளை இழந்து பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.