மின் வாகனங்களில் 40% தமிழகத்தில் உற்பத்தி: முதல்வர் ஸ்டாலின்
இந்தியாவின் மொத்த மின் வாகன உற்பத்தியில், 40 விழுக்காடு தமிழ்நாட்டில் இருந்துதான் உற்பத்தியாகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் சிலாநத்தம் தொழிற்பூங்காவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின் வாகன உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக. 4) தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:
வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்விற்கு, வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை நான் இந்த நேரத்தில் மனதார வரவேற்கிறேன்! வியட்நமிஸ் மொழியில் சொல்ல வேண்டும் என்று சொன்னால், சாமுன் நேஒய் வின்ஃபாஸ்ட் தமிழ்நாடு.
தெற்காசியாவின் மிகப்பெரிய குழுமங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய பெருமைமிகு வின் குழுமம், முதலீடுகளுக்காக, தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்ததற்கு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பெருமையாகவும் இருக்கிறது!
வியட்நாம் என்றாலே வியப்புதான்! அந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட், நான் அடிக்கல் நாட்டி, 18 மாதத்தில் தமிழ்நாட்டில் தன்னுடைய நிறுவனத்தை தொடங்கி, நமக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்!
நம்முடைய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கும் இந்தப் பெருமையில் பெரும் பங்குண்டு! டி.ஆர்.பி. ராஜாவின் உழைப்புக்கு இந்த வின்ஃபாஸ்ட்டே சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது!
இ-வாகனங்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாகவும் மற்றும் நிலைத்தன்மை கொண்ட போக்குவரத்தை முன்னெடுக்கும் நிறுவனமாகவும் இருக்கும் வின்பாஃஸ்ட், தமிழ்நாடு மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்!
இந்தியாவின் மொத்த மின் வாகன உற்பத்தியில், 40 விழுக்காடு தமிழ்நாட்டில் இருந்துதான் உற்பத்தியாகிறது! தமிழ்நாடுதான், இந்தியாவின் வாகன உற்பத்தி மற்றும் மின் வாகன உற்பத்தியின் ‘கேப்பிட்டல்’ என்று நெஞ்சை நிமிர்த்தி நான் சொல்வேன்! சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்ட்! திருப்பெரும்பதூரில் எப்படி முதல் கார் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டதோ, அதேபோன்று, இன்றைக்கு தூத்துக்குடியில் முதல் மின்வாகன உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது! இதன்மூலம் தமிழ்நாட்டிற்கும், வியட்நாமிற்கும் இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும்!
முதல்கட்டமாக, இதுவரை ஆயிரத்து 300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு 50 ஆயிரம் மின் வாகன SUV உற்பத்தியாக இருக்கிறது. தெற்காசியாவிலேயே, வியட்நாமிற்கு வெளியில், இந்த நிறுவனம் தொடங்கியிருக்கும் முதல் மின்வாகன உற்பத்தித் திட்டம் இதுதான்! தமிழ்நாட்டில், அதுவும் நம்முடைய தூத்துக்குடியில் இருக்கும் இந்த ஆலைதான், இந்தியாவிலேயே முழு மின்சார பயணிகள் வாகன உற்பத்தி திட்டம்! இதனால், இந்த வட்டாரத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
என்னுடைய கனவுத் திட்டமாக இருக்கக்கூடிய “நான் முதல்வன்” திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்புப் பயிற்சி பெற்று, இதே தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட டிப்ளமோ மாணவர்கள், இந்த நிறுவனத்தில் வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, கிட்டத்தட்ட 80 முதல் 90 விழுக்காடு பணியாளர்களை தூத்துக்குடி மற்றும் அருகாமையில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் இருந்துதான் இந்த நிறுவனம் பணியமர்த்த போகிறார்கள். உலகளாவிய முதலீட்டில் உள்ளூருக்கான முழுமையான வளர்ச்சி என்கின்ற திராவிட மாடல் அரசின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது!
இந்த திட்டத்தால் தூத்துக்குடியை சுற்றியிருக்கும் மாவட்டங்களிலும், உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி வாய்ப்புகள் பெருகும். சென்னை, காஞ்சிபுரம், கோவை, ஓசூர் ஆகியவற்றைத் தொடர்ந்து, வளர்ந்து வரும் மோட்டார் வாகன தொழிற் கூடமாக தூத்துக்குடி உருவெடுத்து வருகிறது. இப்படித்தான் ஒவ்வொரு மண்டலமாக பார்த்துப் பார்த்து வளர்த்தெடுக்கிறோம்!
இந்தியாவின் இரண்டாவது முழு மின்வாகன உற்பத்தித் திட்டம் என்ற வகையில், கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் TATA JLR நிறுவனத்தின் மின் வாகன உற்பத்திக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில், அடிக்கல் நாட்டினேன். இதன்மூலம், தமிழ்நாடுதான் ‘மின் வாகனங்களின் தலைநகரம்’ என்று உலகத்திற்கு நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறோம்.
தற்போது, ஹுண்டாய், நிஸான், டாடா மோட்டார்ஸ், BMW, BYD, ஓலா, ஏர்தர், டிவிஎஸ், ஆம்பியர் போன்ற முன்னணி நிறுவனங்கள், தங்களின் மின் வாகன உற்பத்தியை தொடங்கிவிட்டார்கள். இன்னும் பல பாரம்பரிய கார் நிறுவனங்களும், மின்சார வாகனங்களின் பாதையை தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு மின்சார வாகனங்களை கொண்டு வரும் இந்த சவாலான பயணத்தில், நீங்கள் எல்லோரும் எங்களுடன் இருக்கிறீர்கள் என்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.
இந்த மகிழ்ச்சியான நேரத்தில், வின் குழுமத்தினரான உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். உங்களின் வின் குழுமம் வாகனத் துறையில் மட்டுமல்லாமல், கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் பொருள்கள் உள்ளிட்ட பல துறைகளில் கோலோச்சும் குழுமம். உங்களின் வருங்கால முதலீடுகளை எல்லாம், தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இந்த நேரத்தில் நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.
வின்ஃபாஸ்ட் உற்பத்தித் திட்டம் தூத்துக்குடியில் நிறுவப்பட உறுதுணையாக இருந்த திராவிட மாடல் அரசு, உங்களின் அனைத்து முதலீட்டுத் திட்டங்களுக்கும் தேவையான உதவிகளை செய்து தர தயாராக இருக்கிறோம் என்று பேசினார்.
இதையும் படிக்க: நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!