தஞ்சாவூர்: வெளிநடப்பு, வாட்டர் பாட்டில் வீச்சு, தர்ணா - மாநகராட்சி கூட்டத்தில் ரகளை; என்ன நடந்தது?
தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் சண்.இராமநாதன் தலைமையில் நடந்தது. இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன் மற்றும் கவுன்ன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும், 12வது வார்டு தி.மு.க கவுன்சிலர் வெங்கடேசன், "கூட்டம் நடத்தப்படும் ஆறு நாட்களுக்கு முன், கவுன்சிலர்களுக்குத் தீர்மான நகல் கொடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் எங்களுக்கு நகல் வழங்கப்பட்டது.
இதிலும் 20 கவுன்சிலர்களுக்கு தீர்மான நகல் கொடுக்கப்படவில்லை. கூட்டத்தை எப்போதும் விதிகளைப் பின்பற்றி நடத்துவதில்லை. ஆணையர் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தற்போது இந்தக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்" என்றார்.

அப்போது ஆணையர் கண்ணன், "மூன்று நாட்களுக்கு முன் தீர்மான நகல் கொடுத்துக் கூட்டத்தை நடத்தலாம் என விதியுள்ளது" என்றார்.
"இனிமேல் ஆறு நாட்களுக்கு முன்பு தீர்மான நகல் கொடுக்கப்படும். கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகளைக் காலதாமதமாகக் கொடுப்பதால், நகல் கொடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது" என மேயர் சண்.இராமநாதன் பேசினார்.
உடனே, தி.மு.க கவுன்சிலர் ஆனந்த் எழுந்து, "கவுன்சிலர்கள் ஏதாவது கூறினால், உடனடியாக அவர்களை உட்கார வைத்து விடுகிறீர்கள். முறையாக நடக்காத இந்தக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்" எனக் கூறி, கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து அவருடன் 20 தி.மு.க கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.
அதே நேரத்தில் அ.தி.மு.க கவுன்சிலர் கண்ணுக்கினியாள், "எனது வார்டில், பாதாளச் சாக்கடை பிரச்சனை உள்ளது. அதைப்பற்றிப் பேச வேண்டும்" என்றார். ஆனால், தி.மு.க கவுன்சிலர்கள் சத்தம் போட்டதால், கண்ணுக்கினியாளும் பதிலுக்குக் கூச்சலிட்டார்.
மேலும், தி.மு.க கவுன்சிலர்கள் சிலர் கண்ணுக்கினியாளிடம் வாக்குவாதம் செய்தனர். அந்தக் கோபத்தில் மேசை மீது இருந்த வாட்டர் பாட்டிலை வீசி, கண்ணுக்கினியாளி வாக்குவாதம் செய்தார். இதனால் கூட்டத்தில் கடும் கூச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து மேயர் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி வெளியேறினார். தொடர்ந்து, தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க கவுன்சிலர்கள், ஆணையரைச் சந்திக்க அவரது அறைக்குச் சென்றனர். இதை முன்கூட்டியே அறிந்த ஆணையர் தனது அறைக்குச் செல்லாமல் வெளியேறி விட்டார். சுமார் 30 நிமிடங்கள் கவுன்சிலர்கள், ஆணையர் அறை முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து வந்த ஆணையரிடம், கூட்டத்தில் நடைபெற்ற தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்றும் கூட்டத்திற்கு வராத கவுன்சிலர்களின் கையெழுத்து வருகைப் பதிவேட்டில் போடப்பட்டுள்ளன என்றும் கூறி, மனு அளித்தனர்.
அ.தி.மு.க கவுன்சிலர் மணிகண்டன் கூறியதாவது, "கூட்டத்தில் போதுமான கவுன்சிலர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட விடவில்லை. அப்படி இருக்கத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மேயர் கூறியுள்ளார். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்ட தீர்மானங்கள் செல்லாது. கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
மேயர் பல்வேறு முறைகேடுகள் செய்து இருப்பதாக தி.மு.க கவுன்சிலர்கள் கூறியுள்ளனர். மேயரின் அனைத்து முறைகேட்டிற்கும் ஆணையர் துணை போகிறார். அவர் பதவி விலக வேண்டும். மேயருக்கு மாநகராட்சி விதிகள் தெரியவில்லை. மேயர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் அல்லது அந்த நாற்காலியில் இருந்து விலகும் வரை போராட்டம் நடத்துவோம்" என்றார்.

இது குறித்து மேயர் இராமநாதன் கூறியதாவது, "கூட்டத்தில் போதிய கவுன்சிலர்கள் ஆதரவு இருந்ததால் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இனி வருங்காலத்தில் கவுன்சிலர்களுக்கு ஆறு நாட்களுக்கு முன் தீர்மான நகல் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நான் அடிப்படையில் இருந்து இந்த இடத்திற்கு வந்தவன். எனது வளர்ச்சி பிடிக்காமல் சிலர் பிரச்னை செய்கிறார்கள்" என்றார்.