மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
மீனவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல், படகு சேதம்! இலங்கை கடற்படை செயலால் அதிர்ச்சி
மீன் இன பெருக்கத்திற்காக தமிழகத்தில் கடந்த 15 -ம் தேதி முதல் இழுவை படகுகளுக்கான தடை காலம் தொடங்கியது. இந்நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 13-ம் தேதி பாம்பனை சேர்ந்த மீனவர்கள் இன்னாசிமுத்து, ஹெடன், களஞ்சியம், கென்னடி, சேந்தி, யாகு, ஆல்பர்ட் ஆகியோர் நாட்டுப்படகு ஒன்றில் தங்கு கடல் மீன்பிடித்தலுக்காக கடலுக்குச்சென்றனர்.

இவர்கள் மன்னார் வளைகுடா கடல் பரப்பில் மீன்பிடித்தலில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த 15-ம் தேதி அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது கண்ணாடி பாட்டிகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் தங்கள் படகினை கரையினை நோக்கி செலுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கை கடற்படையினர் தங்களது கப்பலை கொண்டு நாட்டு படகின் மீது மோதியுள்ளனர்.
இதில் நாட்டு படகின் ஒரு பகுதி சேதமான நிலையில் அந்த படகை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், படகில் இருந்த மீனவர்கள் மீது இரும்பு கம்பிகளை கொண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் மீனவர்கள் உமையராஜ், சேந்தி, ஹெடன் ஆகியோர் காயமடைந்தனர். மேலும் கென்னடி என்ற மீனவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மீனவர்கள் பிடித்து வைத்திருந்த சுமார் 3 லட்சம் பெருமானம் உள்ள வலைகள் மற்றும் மீன்களை அள்ளிச் சென்ற இலங்கை கடற்படையினர், நாட்டு படகு மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.
இதன் பின் நேற்று மாலை கரை திரும்பிய மீனவர்கள் பாம்பன் மீன்துறை அதிகாரிகளிடம் இச்சம்பவம் குறித்து புகாரளித்தனர். இந்திய கடல் பகுதிக்குள் மீன்பிடிப்பில் ஈடுபடும் நாட்டுப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
