குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
முசோலினியின் உடல் தலைகீழாக தொங்கவிடப்பட்ட இடத்தில் எலான் மஸ்க்கின் உருவ பொம்மை!
இத்தாலி நாட்டின் சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் உடல் தலைகீழாக தொங்கவிடப்பட்ட இடத்தில் அதேப்போல் எலான் மஸ்க்கின் உருவ பொம்மை தொங்கவிடப்பட்டுள்ளது.
கடந்த ஜன.20 அன்று அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக்கொண்டார். அந்த விழாவில் அவரது ஆதரவாளரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க் மேடையில் ஏறி பேசினார். அப்போது, தனது வலக்கையை அங்கிருந்த மக்களை நோக்கி நீட்டி தோள்பட்டை அளவுக்கு உயர்த்தியபடி ஜெர்மானிய சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லரின் பாணியில் வணக்கம் தெரிவித்தார்.
அவரது இந்த செயல் கடும் சர்ச்சைகளையும் கண்டனங்களையும் எழுப்பியது. ஆனால், இந்த செய்கை மேடையில் அவர் பேசிய உற்சாகத்தில் செய்தது என்றும் அது நாஜி படையை குறித்த செய்கை இல்லை என்றும் அவரது தரப்பில் கூறப்பட்டது.
இதையும் படிக்க: லிபியா போர் குற்றவாளி இத்தாலியில் விடுதலை.. அரசு விளக்கமளிக்க உத்தரவு!
இந்நிலையில், கடந்த ஜன.21 அன்று இத்தாலி நாட்டின் மிலான் பியாஸ்லே லொரெட்டோ எனும் இடத்தில் அவரது செயலுக்கு கண்டனம் தெரிவித்து எலான் மஸ்க்கின் உருவ பொம்மை தலைகீழாக தொங்கவிடப்பட்டுள்ளது. இந்த கண்டன போராட்டத்தை நடத்தியதாக இத்தாலியை சேர்ந்த இடதுசாரி இளைஞர் அமைப்பான ’கம்பியாரே ரோட்டா’ பொறுப்பேற்றுள்ளது.
முன்னதாக, எலான் மஸ்க்கின் உருவ பொம்மை தொங்கவிடப்பட்ட இடமானது இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஹிட்லரின் நெருங்கிய கூட்டாளியான இத்தாலி நாட்டின் சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி கொல்லப்பட்டு அவரது உடல் தலைகீழாக தொங்கவிடப்பட்ட இடம் என்று கூறப்படுகிறது.
பாசிஸ கொள்கைக்கு எதிராக திரண்ட மக்கள் படையினால் கொல்லப்பட்டு அவரது உடல் அங்கு தொங்கவிடப்பட்ட நிலையில் அதே இடத்தில் தற்போது எலன் மஸ்கின் முழு உருவ பொம்மை தொங்கவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.