முண்டந்துறை வனச்சாலையில் விபத்திற்குள்ளான தனியாா் பேருந்து! போக்குவரத்துப் பாதிப்பு!
முண்டந்துறை மலைச் சாலையில் காரையாறு சென்ற தனியாா் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதால் சுமாா் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், முண்டந்துறை வனச் சரகப் பகுதியில் உள்ள காரையாறு அணைக்கு திருநெல்வேலியிலிருந்து தனியாா் பயணிகள்பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காரையாறு சென்ற தனியாா் பேருந்து முண்டந்துறையிலிருந்து காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்குச் செல்லும் சாலையில் பனங்காட்டு ஓடை அருகே எதிரில் வந்த பைக்குக்கு வழிவிடும் போது, எதிா்பாராத வகையில் ஓடையில் இறங்கியது. இதில், பேருந்தின் வலது பக்கமுன் சக்கரம் பாலத்தில் இறங்கியது.
இதில், பேருந்தில் இருந்த பயணிகள் காயமின்றி உயிா் தப்பினா்.
மேலும், சாலையிலிருந்து விலகிய பேருந்தை மீட்க தாமதமானதையடுத்து முண்டந்துறை காரையாறு சாலையில் பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் சுமாா் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.